பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/109

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சாயங்கால மேகங்கள்
107
 

இந்த மனப்பான்மை அவனுக்குப் பிடிக்கவில்லை. அதிகாரம் என்பதே மக்களைச் சுரண்டுவதற்காக என்ற எண்ணம் இந்திய அதிகார வர்க்கத்தினரிடம் ஒரு சித்தாந்தமாகவே வளர்ந்திருப்பதை அவன் கண்டான். நாட்பட்ட சித்தாந்தமாக அது வளர்ந்து காடு மண்டியிருந்தது.

கேஷ் டேபிள் அருகே நின்று அந்தக் கார்ப்பரேஷன் ஆட்கள் போவதைப் பார்த்துக் கொண்டிருந்த சித்ரா பூமியைக் கேட்டாள்.

“நீங்களோ நானோ இல்லாத சமயம் பார்த்து வந்து. இவர்கள் அப்பாவி முத்தக்காளை மிரட்டப் போகிறார்கள். அப்படி நடந்தால் என்ன செய்வது?”

“நடந்தால் அதை எதிர்கொண்டு சமாளிப்போம்! இந்தத் தேசத்தைப் பிடித்த துரதிர்ஷ்டம் அது. மக்களின் வரிப் பணத்தில் நடக்கும் மாநகராட்சி, மக்களை மிரட்டுவதற்காகவேதான் இருப்பதாக எண்ணுகிறது. மக்களின் வரிப் பணத்தில் சம்பளம் வாங்கும் அதிகாரிகள் மக்களை அரட்டி மிரட்டி தர்பார் செய்யவே தாங்கள் அதிகாரத்தில் இருப்பதாகக் கருதுகிறார்கள். மக்களைக் காப்பாற்றவும் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும் ஏற்பட்ட போலீஸார் சில சமயங் களில் வேலியே பயிரை மேய்வது போல் மக்களிடம் நடந்து கொள்கிறார்கள்.”

“இந்நாட்டின் பெருவாரியான மக்களும் அவற்றுக் கெல்லாம் அடங்கித்தானே போகிறார்கள்?”

“உண்மைதான்! அடக்குகிறவனுக்கு மட்டுமே அடங்குவது அன்பாகவும், பண்பாகவும் நடந்து கொள்கிறீலனை உதாசீனம் செய்வது போன்ற குணக்கேடுகள் இந்நாட்டு மக்களிடமும் உண்டு. ஜனநாயகத்துக்கு ஆகாத குணக்கேடுகள் இவை.”

அவனும் சித்ராவும் இவ்வாறு உரையாடிக் கொண்டிருக்கையில் முத்தக்காள் அங்கே வந்தாள்,