களாலேயே அதிகாரம் செய்யப்படுகிறார்கள். சுயமரியாதையும் தன்மானமும் இல்லாத மக்களுக்கு, சுய மரியாதையும் தன்மானமும் இல்லாத சுமாரான அரசாங்கம்தான் கிடைக்கும். சுய நலமும் பயமும் உள்ள மக்கள் தொகையைச் சகலவிதத் திலும் சுரண்டுவது மிகமிகச் சுலபம். தங்களுக்கு என்னென்ன உரிமைகள் உண்டு என்றே புரியாத மக்களை யார் வேண்டுமானாலும் மிரட்டி அதிகாரம் செய்யலாம். யார் வேண்டுமானாலும் மிரட்டிப் பணம் பறிக்கலாம். அதுதான் நடைமுறையில் இருந்தது.
முத்தக்காளே கார்ப்பொரேஷன் அதிகாரிகள் ஓசியில் சாப்பிட்டுவிட்டுப் போவது அநியாயம் என்று நினைக்கவில்லை. போனால் போகட்டும்! அவர்களால் வர முடிந்த கெடுதல் வராமல் இருந்தால் சரி என்றே நினைத்தாள். நியாயம் நேர்மைகளை விட அவ்வப்போது காரியம் நடக்க எது எது பயன்படுமோ அந்த முறைகளைக் கடைப்பிடித்துச் சமாளித்துக் கொண்டு எப்படியேனும் வாழ்வது என்ற நிர்க்கதியான நிராதரவான நிலைக்கு மக்கள் வந்து விட்டார்கள் என்று தோன்றியது.
ஒரு கணம் எதையோ நினைத்து மறுபடியும் பூமி தயங்கினான். முத்தக்காளுக்குத் தன்னால் நேர்ந்த சிரமத்தைச் சரி செய்வதற்கே இவ்வளவு பாடுபாட வேண்டியதாயிற்று. இனியும் புதுப் புதுச் சிரமங்கள் ஏற்பட வழி வகுக்கலாமா, கூடாதா என்ற முன்னெச்சரிக்கையோடு சிந்தித்தான் பூமி.
பொதுவாழ்க்கை இன்றுள்ள குழப்புமான நிலையில் அளவற்ற நேர்மையும், ரோஷமும் தன்மானமும் குற்றங்கண்டு, கூசும் மன நிலையும் உள்ள ஒருவன் ஒதுங்குதல், அல்லது ஒதுக்கப்படுதலுக்கே ஆளாகிறான். தானும் அப்படி ஆகி விடுவோமோ என்று பயமாகக் கூட இருந்தது அவனுக்கு. ஆனாலுமே அந்த நிராதரவான விதவையோடு அங்கே உடனிருந்து போராடி நியாயங்களைக் காத்தே ஆக வேண்டுமென்ற, பிடிவாதத்தையும் அவனால் விட்டுவிட முடியவில்லை.