சாயங்கால மேகங்கள்
115
ஆணவம் என்றும் மாற்றிப் புரிந்து கொள்கிறார்கள். புரிய வைக்கிறார்கள்.
தான் பழகுகிற சந்திக்கிற மனிதர்களிடையே கூட இந்த முரண்பாடுகளைப் பூமி அடிக்கடி கண்டான்.
அவன் டாக்ஸி-ஆட்டோ டிரைவர்களுக்குக் கராத்தே கற்பிக்கத் தொடங்கி ஒரு மாத காலம் ஓடிவிட்டது. அவன் காலை மாலை வேளைகளில் எந்த நேரம் முதல் எந்த நேரம் முடிய அந்த வேலையில் ஈடுபட்டிருப்பான் என்பதுகூட அவனுக்கு வேண்டியவர்களுக்கு அத்துபடியாகிவிட்டது.
ஒருநாள் மாலை அவன் டிரைவர்களுக்குக் கராத்தே முறைகளையும் பாணிகளையும் கற்பித்துக் கொண்டிருந்தபோது சித்ராவும் அவள் தோழி தேவகியும் அவசரமாக அவனைத் தேடி அங்கே வந்தார்கள். பூமி அவர்களை அங்கே அந்த வேளையில் எதிர்பார்க்காததால் ஆச்சரிய மடைந்தான்.
“அவசரமாக உங்கள் உதவி தேவை! ஓர் ஏழைக் குடும்பத்துப் பெண்ணின் மானத்தைக் காப்பதற்கு உங்கள் ஒத்துழைப்பு வேண்டும்” என்று பதற்றமான குரலில் அவனிடம் வேண்டினாள் சித்ரா.
“இங்கே போலீஸ், நீதி, சட்டம் எதுவுமே ஏழைகளின் மானத்தைக் காப்பாற்றாது போலிருக்கிறது என்று தேவகியும் அவனை நோக்கிக் கூறினாள்.
“சற்று விவரமாகத்தான் சொல்லுங்களேன்” என்றான் பூமி.