இன்றைய சமூகத்தின் எந்த மூலையிலும் ஒழுங்கற்று இருக்கிற ஒருவனைக் கண்டிக்க முன் வருகிறவர்களைவிட அவனுக்குப் பயந்து பணிந்து ஒதுங்கி ஒடுங்கி விடுகிறவர்களே அதிகம்.
சித்ராவும் தேவகியும் வந்து கூறிய விவரங்களிலிருந்து பெரும்பாலான இந்நாட்டு இளைஞர்களைப் பற்றிக் கவலையும் பரிதாபமும் கொண்டான் பூமி. தங்களை விரும்பாத பெண்களைத் தாங்கள் விரும்புகிற கழிசடைகளாகக் காமுகர்களாய், முன்னேறுகிற ஒரு சமுதாயத்தில் வெறும் ‘நியூஸென்ஸ் வால்யூ’ மட்டுமே உள்ளவர்களாய் இன்றைய இளைஞர் சக்தி சிதறுண்டு போவதை அறிந்து வருந்தினான் பூமி.
படிக்கிற வயதில் அடுத்தவன் வீட்டுப்பெண் பிள்ளையைச் சுற்றுகிற இளைஞனைப்போல் சமூகவிரோதி வேறொருவன் இருக்க முடியாது. ஆண் துணையில்லாத ஓர் அநாதைக் குடும்பத்துப் பெண்ணுக்கு இப்படித் தொல்லை கொடுத்தால் அந்தக் குடும்பம் என்னதான் செய்யும்?.
‘இப்படி ஊர் வம்புக்கெல்லாம் வரிந்து கட்டிக் கொண்டு அலைய நாம்தானா அகப்பட்டோம்?’ என்று ஒருகணம் தோன்றியது. ஆனால் அடுத்த கணமே அந்த எண்ணம் மாறியது. ‘எல்லாருமே எல்லாவற்றிலும் சுயநலமாக மாறிவிட்டால் அப்புறம் மனிதனாக வாழ்வதில்தான் என்ன பெருமை இருக்கிறது?’ என்று எண்ணியபோது அவன் மனத்தில் பழைய கருணையும், இரக்கமுமே மேல் எழுந்துமிகுந்து நின்றன.