122
சாயங்கால மேகங்கள்
சித்ராவும் தேவகியும் தேடி வந்து வேண்டியதற்காக இந்த வம்பிலும் தானே தலையிடுவது என்று துணிந்தான் அவன். பதவியும், அதிகாரமும், பணமும் உள்ளவர்களிடம் மோதுவது எவ்வளவு சிரமமான காரியம் என்று அவன் யோசிக்கவில்லை. தயங்கியபடி அதைத் தள்ளிப் போடவுமில்லை. உடனே துரிதமாக அந்த அநாதைக் குடும்பத்துக்காகப் பரிந்துகொண்டு போக வேண்டுமென்றுதான் முனைப்பாயிருந்தது.
என்ன காரணத்தினாலோ தெரியவில்லை. பொதுக் காரியங்களில் இப்படி ஒரு முனைப்பையும் சுறுசுறுப்பையும் அவனால் தவிர்க்க முடியவில்லை. இந்த முனைப்பு அவனுடைய இரத்தத்தோடு கலந்து போயிருந்தது. இது அபாயம் தருவது. இது தனக்கு கேடு சூழ்வது என்று பிறர் நலனுக்காகவும் பொது நலனுக்காகவும் பாடுபடும்போது எந்த விநாடியும் எதற்கும் தயங்கி ஒதுங்க முடியாதது தன் பலமா பலவீனமா என்று பலமுறை அவன் தனக்குத்தானே சிந்தித்திருக்கிறான்.
காலையில் கல்லூரி தொடங்குகிற நேரத்துக்குப் பூமி அங்கே போய்விட்டான். அந்தக் கல்லூரியின் முதல்வர் ஒரு நடுத்தர வயதைக் கடந்த முதியவர். கல்லூரி மாணவர்கள், படிப்பு, இளைஞர் மனப்போக்கு ஆகியவை பற்றி மிகவும் கசப்பான உணர்ச்சியோடு இருந்தார். எதிலும் நம்பிக்கையோடு பேசவில்லை. அவர். ‘ஏதோ காலத்தைக் கடத்திக்கொண்டிருக்கிறேன்’ -என்கிற தோரணையில் அலுத்துக்கொண்டார். விதியையும் தலை எழுத்தையுமே நிறைய நம்பினார்.
“உங்கள் கல்லூரியில் உங்கள் ஆணைக்குக் கட்டுப்பட்டுப் படிக்கிற மாணவன் இப்படி ஒரு தவறு செய்தால் நீங்கள் கூப்பிட்டுக் கண்டிக்க வேண்டாமா? ஆண் துணையற்ற குடும்பத்து ஏழைப்பெண் ஒருத்தியைச் சுற்றிக்கொண்டு துரத்துவது என்பது படிக்கிற பையனுக்கு அழகில்லையே?” என்று பூமி பேச்சைத் தொடங்கினான்.