பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/136

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
134
சாயங்கால மேகங்கள்
 

அதுதான் சமயமென்று தெரிந்த ஆளான அந்தப் பார்க் வாட்ச் மேனிடம் கூறி உள்ளே பூங்காப் பகுதிகளில் எரிந்து கொண்டிருந்த மின் விளக்குகளை அணைக்கச் செய் தான் பூமி, பார்க்கில் இருள் சூழ்ந்தது. வானில் மேகமூட்டம் வேறு. அவனும் குழுவினரும் இருளில் பாய்ந்தார்கள். ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்க்க முடியாத அளவு இருட்டு இருந்தது வசதியாகப் போயிற்று. ரெளடி குமரகுரு வசமாகச் சிக்கிக் கொண்டான்.

“ஏண்டா பொம்பளைப் பொறுக்கி! தெருவிலே போற பொம்பிளைங்களைச் சுத்திக்கிட்டு மிரட்டறதை இனிமேலாவது விடுவியா இல்லியா? உதை போதுமா? இன்னும் வேணுமா?”

“ஐயோ என்னை விட்டுடுங்க... கொன்னுப்புடாதீங்க...” என்று குமரகுரு பரிதாபகரமாக அலறுவது இருளிலிருந்து கேட்டது.

“நீ இப்பிடி. எத்தனை அநாதைப் பொண்ணுங்களை அலற அலறத் தொல்லைப் படுத்தியிருப்பே, இப்ப அதுக்கு வட்டியும் முதலுமாச் சேர்த்து அநுபவிடா அயோக்கிய நாயே.”

அங்கே மறுபடி பார்க்கில் வெளிச்சம் வந்தபோது மூர்ச்சையுற்றுக் கிடந்த குமரகுருவின் உடல் மேல் வால்போஸ்டர் போலப் பெரிய தாளில், ‘அபலைப் பெண்களின் பின்னால் சுற்றித் திரியும் திமிர் பிடித்த காமுகர்களுக்கு இதுதான் நேரிடும்’ என்று பெரிய எழுத்துக்களில் எழுதியிருந்தது.

வாட்ச்மேன் ஓடிப்போய்ப் போலீஸுக்குத் தகவல் தெரிவித்தான்.

கீழே’ கிடந்த உடலில் மார்புப் பகுதியை மறைத்துக் கிடந்த போஸ்டர் பரபரப்பை உண்டு பண்ணவே அந்த நேரத்திலும் ஒரு கூட்டம் கூடி விட்டது. பல்லக்குமானியம் குடியிருப்புப் பகுதிக்குத் தகவல் எட்டி அங்கிருந்து வேறு நிறைய ஆட்கள் வேடிக்கை பார்க்க வந்தார்கள்.