உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

சாயங்கால மேகங்கள்

தரவேண்டும் என்ற பூமியின் வாதம் அங்கே செல்லுபடியாகவில்லை. பணமும் அதிகாரமும் உள்ளவர்களுக்குச் சிவில் உரிமைகள் மட்டுமல்லாமல் அதற்கும் அதிகமான உரிமைகள் காட்டப்பட்டன. பணமோ அதிகாரமோ இல்லாமல் நியாய ன பாத்தியதை மட்டும் உள்ளவர்களுக்கோ அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டன. சுதந்திர இந்தியா அப்படித்தான் இருந்தது. உரிமைகளுக்கும் மறைமுக விலை, வரி எல்லாம் இருந்தது.

உரிமைகள் மறுக்கப்பட்டபோது பணமும் அதிகாரமும் உள்ளவர்கள் அவற்றைச் சலுகைகள்போல் பெற முற்பட்டு பின் அதுவே வழக்கமாகி விட்டிருந்தது.

உரிமைகளைச் சலுகைகள்போல் பெறும் மௌட்டீகம் நிறைந்த மக்களும், கடமைகளை உதவிகள் போல் செய்யும் திமிர் பிடித்த அதிகார வர்க்கமும் ஏற்படுகிற நாட்டில் சுதந்திரமாவது, ஜனநாயகமாவது என்று தோன்றியது. கார்ப்பொரேஷன் உத்தரவு பூமிக்கு எரிச்சலூட்டியது. மாநகராட்சிச் சட்டப்படி என்னென்ன சுதாதார வசதிகள் தேவையோ அவை குறைவின்றிச் செய்யப்பட்டிருந்தும் காரணமே காட்டாமல் ஹோட்டலை உடனே மூடவேண்டும் என்று உத்தரவு இடப்பட்டிருந்தது. அந்தச் சவாலை ஏற்று எதிர் நின்று சமாளித்தாக வேண்டும் என்று பூமி உறுதி செய்து கொண்டான்.

முத்தக்காளிடம் இந்த விவரத்தைச் சொல்லி யோசனை கேட்டால் அவள் தான் கடைப்பிடித்த பழைய வழியைத்தான் விரும்புவாள் என்று பூமி எண்ணினான், சித்ராவும் அப்படித்தான் அபிப்பிராயப்பட்டாள்.

பாவ புண்ணியங்களையும் கடவுளையும் நம்பும் பழைய தலைமுறை மனிதர்கள் அவற்றின் உடனிகழ்ச்சியாகச் சத்தியத்தையும் நேர்மையையும் நம்பிச் செயல்பட மட்டுமே துணிவதில்லை. அப்படி நேரங்களில் சமயோசிதத்தை மட்டுமே தம்பி வளைந்துகொடுத்து வாழ்கிறார்கள்.