சாயங்கால மேகங்கள்
145
அதனால்தான் இந்நூற்றாண்டில் ஆஸ்தீகனாக இருக்கும் ஓர் அயோக்கியனைவிட நாஸ்திகனாக இருக்கும் ஒரு யோக்கியனை அதிகம் மதிக்க வேண்டியிருக்கிறது. நேர்மையை நம்பாமல் கடவுளை மட்டும் நம்புகிற ஒருவனைவிடக் கடவுளை நம்பாமல் நேர்மையை நம்பும் ஒருவனைப் பலமடங்கு உயர்ந்தவனாகக் கொள்ள வேண்டியிருக்கிறது, இதில் பூமி கடவுளைவிட உண்மையையும் நேர்மையையும் மதிக்கவும் செயலாற்றவும் கற்றிருந்தான். சித்ரா அவனிடம் சொன்னாள்:
“கார்ப்பரேஷன் விவகாரமே இப்படித்தான், அந்தக் கட்டிடமே லஞ்ச மயமானது. சுவரோரமாக யாராவது சாய்ந்து நின்றால், அந்தக் கட்டிடத்துச்சுவர் கூ.டக் கை நீட்டி ‘ஏதாவது கொடு’ என்று கேட்கும். ரிப்பன் கட்டிடத்தினது சுவருக்குக்கூட அந்த மகிமை உண்டு.”
“இருக்கலாம்! அது எனக்குத் தெரியாது. ஆனால், நான் இதை இப்படியே விட்டுவிடப் போவதில்லை, மடி.யில் கனமில்லாதபோது வழியில் யாருக்காகப் பயப்பட வேண்டும்? எதற்காகப் பயப்பட வேண்டும்? சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போகிறேன். இந்த மாதிரி வழக்குகளில் பழக்கமுள்ள ஒரு வக்கீலைச் சந்திக்க வேண்டும்” என்றான் பூமி,
“திரு. வி. க. லெண்டிங் லைப்ரரி பரமசிவம் அண்ணனுடைய கடையில் இப்படி ஒரு வக்கீலை நான் அடிக்கடி பார்த்திருக்கிறேன், கன்ஸ்யூமர் மூவ்மெண்ட், சிவில் லிபர்ட்டீஸ் இயக்கம் ஆகியவற்றோடு நெருங்கின தொடர்பு உள்ளவர். புத்தகங்கள் எடுப்பதற்காக அடிக்கடி அண்ணனுடைய லைப்ரரிக்கு வருவார்.”
என்று சித்ரா கூறியவுடன் இருவருமாகப் பரமசிவத்தின் நூல் வழங்கும் நிலையத்திற்குச் சென்றார்கள். அங்கே மாலை நேரத்தில் அலுவலகம் விட்டு வீடு திரும்புகிற வழியில் புத்தகங்களையும் எடுத்துச் செல்வதற்காகப் பலர் கூடியிருந்தார்கள். அந்தப் பரபரப்பிலும் பரமசிவும் பூமியையும் சித்ராவையும் முகமலர்ச்சியோடு வரவேற்றார்.