பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/148

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146

சாயங்கால மேகங்கள்

எங்கிருந்தோ அப்போது புரட்சிமித்திரன் அங்கு வந்து சேர்ந்தான்.

“ஹாய் சித்ரா! உன்னிடம் நான் எவ்வளவோ வற்புறுத்திச் சொல்லியிருந்தும் அந்தக் கவியரங்கத்துக்கு நீ ஏன் வரவில்லை? அடுத்தவாரம் எல், எல். ஏ. பில்டிங் ஹாலில் ஒரு பட்டிமன்றம் இருக்கிறது. அதற்காவது கட்டாயம் உன்னை எதிர்பார்க்கிறேன்” என்று தயாராகச் சித்ராவிடம் இன்விடேஷன் கார்டை எடுத்து நீட்டினான் புரட்சி மித்திரன்.

சித்ரா புன்னகை புரிந்தாள். கார்டை வாங்கிக் கொண்டாள். “உங்கள் இன்விடேஷனுக்கு நன்றி! ஆனால் இதற்கெல்லாம் வரவும், பொழுதுபோக்கவும் எனக்கு நேரமில்லை. உங்களைப் போன்ற பிரபுத்துவக் குடும்ப இளைஞர்களுக்கு கவிதை, கலை, இலக்கியம், புரட்சி எல்லாமே இப்படிப் பொழுது போக்குகள் தான். பட்டிமன்றங்களும், கவியரங்கங்களும் நாட்டில் எதையுமே சாதிக்கப் போவதில்லை.”

“நீ இப்படியெல்லாம் பேசுவதற்கு மிஸ்டர் பூமிநாதன்தான் காரணம் என்று நினைக்கிறேன் சித்ரா!”

“நீங்கள் சொல்கிறபடி இந்த மாறுதல்களுக்கு, நான்தான் காரணம் என்றால், அதற்காக நான் வருந்தவில்லை, பெருமைப்படுகிறேன்” என்று உடனே புரட்சி மித்திரனுக்குக் சுடச்சுடப் பதில் கூறினான் பூமி.

நூல் வழங்கு நிலையத்தில் கூட்டம் குறைந்ததும், பரமசிவமே பூமியையும், சித்ராவையும் லாயிட்ஸ் ரோட்டில் இருந்த அந்த வழக்கறிஞர் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

அந்த வழக்கறிஞர் உற்சாகமாக அவர்களை வரவேற்றார். பூமி எல்லா விவரங்களையும் தெரிவித்துவிட்டு, மாநகராட்சியின் சுகாதார இலாகாவிலிருந்து வந்திருந்த, நோட்டீஸையும் அவரிடம் கொடுத்தான்.

அதைப் படித்துப் பார்த்துவிட்டு அவர் அவனிடம் கேட்டார்: