பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாயங்கால மேகங்கள்

147

"சட்டப்படி இருக்க வேண்டிய சுகாதார வசதிகள் உங்கள் ஹோட்டலில் குறைவின்றி இருக்கின்றன அல்லவா?”

“சொல்லப் போனால் சட்டத்தில் இருப்பதைவிட, அதிகமான சுகாதார வசதிகளை நாங்கள் எங்களுடைய ஹோட்டலில் செய்து கொடுத்திருக்கிறோம்.”

“பின் எதற்காக இத்தனை கடுமையான நடவடிக்கை? ஏதோ ஹோட்டலை உடனே இழுத்து மூடி விட வேண்டும் என்பது போல் ஆத்திரமாக உத்தரவு போட்டிருக்கிறார்கள்?”

“நினைத்த போதெல்லாம் சானிடரி இன்ஸ்பெக்டரும், மேஸ்திரியும், பரிவாரங்களும் ஹோட்டலுக்குள் நுழைந்து நாற்பது ஐம்பது ரூபாய்க்குச் சாப்பிட்டு விட்டு பில் கொடுக்காமல் போவதை நாங்கள் அனுமதிக்க மறுத்தோம். எண்ணெயும் பருப்பும் இப்போது விற்கிற விலையில் ஓசி கொடுத்துக் கட்டுப்படியாகுமா? நாங்கள் ஓசி டிபன் மறுத்ததற்குப் பழி வாங்கத்தான் இந்த நடவடிக்கை என்று நினைக்கிறேன்.”

“ஹோட்டலை மூடிவிட முடியும் என்ற அவர்களுடைய திமிரை ஒடுக்க வழி இருக்கிறது. கவலைப்படாதீர்கள், ஒரு ரிட் போடலாம். மாநகராட்சி உத்தரவிற்கு ஸ்டேட் வாங்கி விடலாம், அது என்னால் முடியும். மற்ற வர்த்தகர்கள் சுலபமாக. எதற்கெடுத்தாலும் லஞ்சம் கொடுத்து பழக்கப்படுத்தி விடுவதினால் லஞ்சம். கொடுக்காதவன் மோசமானவன் என்று நினைத்துப் பழிவாங்க முற்பட்டு விடுகிறார்கள்.”

“அதிகார வர்க்கத்தையும் சர்க்கார் அலுவலகங்களையும் பிடித்திருக்கும் நீண்டகாலத் தொற்று நோய் அது. புதிய விழிப்புள்ள இளைஞர் சமூகம்தான் இனி அதைப் போக்க வேண்டும். இப்போது நீங்கள் முன் வந்திருக்கிற மாதிரிப் பலர் துணிந்து முன் வந்து நீதி கோரினால்தான். பரிகாரம் கிடைக்கும்! கோர்ட் வேண்டாம். வழக்கு வேண்டாம்.. வம்பு வேண்டாம். குறுக்கு வழியில் பணத்தைக் கொடுத்துத் தன்னைக் கட்டிக் கொள்ளலாம் என்று மக்களே குறுக்கு வழிகளை நாடுகிற வரை இந்த நோய் தீரப் போவதில்லை."