பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாசூக்காகப் பணத்தை மறுத்த தன்னைப் பற்றி அவள் எப்படி உயர்வாக நினைப்பாள்?

இதைச் சிந்தித்தபோது அவன் உள்ளம் காதல் மயமாகி நெகிழ்ந்து போயிருந்தது. கையிலிருந்த புத்தகத்தைத் தோன்றியபடி எல்லாம் புரட்டியபோது “சொல்லினைத் தேனில் குழைத்து உரைப்பாள்"---என்றொரு தொடர் தென்பட்டது. அந்தத் தொடர் சித்ராவின் குரலை நினைவூட்டியது.

பகல் மணி பதினொன்று: இனி இங்கே சவாரி கிடைக்காது என்ற முடிவுடன் புறப்படுவதற்காகப் பூமிநாதன் வண்டியை உலுக்கி ஸ்டார்ட் செய்தபோது அவன் தெருவில் அவனுடைய வீட்டருகேயே குடி இருக்கும் மற்றொரு ஆட்டோ டிரைவர் கன்னையன் அங்கு வந்து சேர்ந்தான். கன்னையனிடம் ஒரே பரபரப்பு.

“பூமி! உன்னை எங்கேயெல்லாம்ப்பா தேடறது? உடனே ராயப்பேட்டா ஆஸ்பத்திரி ‘அவுட் பேஷண்ட்’ வார்டாண்டே போ... உங்க அம்மா... குழாயடிலே மூர்ச்சையா விழுந்திடுச்சு. நம்ப குப்பன் பையன்தான் அவன் வண்டிலே போட்டுக் கொண்டு ஆஸ்பத்திரிக்குப் போயிருக்கான். நீ உடனே போ... சொல்றேன்.”

பூமி இராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்குப் பறந்தான். நெஞ்சு வேகமாக அடித்துக்கொண்டது. உள்ளத்தில் ஒரே பதற்றம்.


2

குலையில் வாழைக்காய் முற்றியவுடன் தானாகப் பழுப்பதில்லை. தாறு வெட்டிச் சூட்டில் மூடி வைத்துப் பழுக்கச் செய்வார்கள். அதைப்போல் சமூகத்தின் கொடுமைகளாகிய சூட்டில் வெந்துதான் சிலர் வாழ்வில் கனிகிறார்கள்.