உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாயங்கால மேகங்கள்

151

பிழிந்து பத்தாயிர ரூபாய் ரொக்கம், ஒன்றரைக் கிலோ தங்கத்துக்கு நகைகள், வரவேற்பு முதலிய செலவுகள் என்று அடித்து வைத்துப் பேரம் பேசியிருக்கிறார். நானும் பரமசிவம் அண்ணனும் பெண் விடுதலையைப் பற்றிப் பாடிய முதல் தமிழ் மகாகவி பாரதியார்மேல் ஆணையிட்டுச் சபதமே செய்திருக்கிறோம். இப்படிப்பட்ட மாப்பிள்ளை வியாபாரத் திருமணங்களுக்குப் போவதில்லை என்பதுதான் எங்கள் சபதம். பெண் ஆணைக் கணவனாக அடைய அவள் தந்தை விலை கொடுக்கிற நிலையைச் சமூகமோ மக்களோ கூடி நின்று, ஆசீர்வதிப்பதோ வாழ்த்துவதோ பெரிய பாவம் என்று நாங்கள் நினைப்பதுதான் காரணம். இந்தப் பாவங்களைச் சாஸ்திர சம்மதமாக்கி, மேளம் கொட்டி விருந்து வைத்துத் தாம்பூலம் தந்து கொண்டாடுவதைவேறு நினைத்தால் உள்ளம் கொதிக்கிறது சித்ரா!”

“நம்மைப் போன்ற இளைய தலைமுறையினராவது இதற்கு முடிவுகண்டாக வேண்டும் சித்ரா! ஒவ்வொரு பெண்ணின் திருமணமும் அவள் திருமணம் முடிந்தபின் தாய் தந்தையையும் மீதியுள்ள குடும்பத்தையும் திவாலாக்கி நடுத்தெருவில் கொண்டு வந்து நிறுத்துகிறது. இதற்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டும். பெண்ணடிமைத்தனம் இப்படித் திருமணத்திலேயே ஆரம்பமாகிறது” என்றார் பரமசிவம்.

“சிறுமைகள் நிறைந்த திருமணத்தைப் பெரியோர்கள் நிச்சயிப்பதாக வேறு சொல்லிக் கொள்கிறார்கள்.”

அவனுடைய கொள்கை உறுதியும் பிடிவாதமும் அவளுக்கு மிகவும் பிடித்தன. பூமி ஒப்புக்காகவோ, பிறர் மெச்சவோ எதையும் செய்ய மாட்டான் என்பது அவளுக்குப் புரிந்தது. முத்தக்காள் தங்கள் ஹோட்டலின் சார்பில் அவன் அந்தத் திருமணத்திற்குப் போய் வரவேண்டும் என்று விரும்பினாள். அவனோ அந்தத் திருமணத்திலிருந்த வர தட்சிணை பேரங்களின் கொடுமையைத் தெரிந்து கொண்டு தவிர்த்து விட்டான். இருவரும் பரமசிவம் அண்ணனின்