154
சாயங்கால மேகங்கள்
தால் சில விபத்துக்களும் என்று நகரங்கள் விபத்து மயமாக மாறி விட்டன. முன்பெல்லாம் வாழ்க்கையின் இடையிடையே விபத்துக்களும் இருந்தன. ஆனால் இப்போதோ விபத்துக்களின் இடையேதான் வாழ்க்கையே இருக்கிறது. அதிக ஜாக்கிரதையும் தேவைப்படுகிறது.
அவர்கள் கடற்கரையில் போய் அமர்ந்தார்க்ள், கடற்கரைச் சாலையில் விளக்குகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக எரிந்து கொண்டிருந்தன. கூட்டம் அதிகம் இல்லை, சுண்டல், முறுக்கு, மிளகுவடை விற்கும் பையன்கள் பம்பரமாகச் சுற்றி வியாபாரத்துக்கு முயன்று கொண்டிருந்தார்கள்.
திடீரென்று ஒரு மூலையில் சற்றே இருட்டாக இருந்த ஓர் இடத்திலிருந்து பெண்ணின் அலறல் ஒன்று கிளம்பியது. நின்று நின்று ஒலித்த அலறல் வந்த மூலையைப் பார்த்தபோது இரண்டு மூன்று ஆண்கள் கும்பலாக நிற்பது போலிருந்தது. அவர்கள் தங்களிடம் சிக்கிய பெண்ணின் வாயில் துணியைத் திணித்துக் குரலை அடக்க முயன்றதாலோ என்னவோ அவளுடைய அலறல் மெல்ல ஒடுங்குவதும் கிளம்புவதுமாக இருந்தது.
பூமி எதையோ தனக்குத்தானே அநுமானித்தவனாக அந்தத் திசையில் பாய்ந்தான். சித்ராவும் பின் தொடர்ந்தாள். கடற்கரையில் கூட்டம் அதிகமில்லை. மேற்குப் பக்கம் இருந்த மெரீனா சாலையிலோ, கீழேயே மணற்பரப்பில் பரவலாக அங்கங்கே அமர்ந்திருந்த ஒரு சிலருக்கோ அந்தப் பெண்ணின் குரல் கேட்கவில்லை என்று சொல்ல முடியாது. கேட்டிருக்கும் தான். அந்தக் குரலிலிருந்த அபயம் கேட்கும் தொனியும் கூட அவர்களில் ஓரிருவருக்குப் புரிந்துதான் இருக்கும்.
ஆனால் யாரும் துணிந்து எழுந்திருந்து குரலுக்குரியவளைக் காப்பாற்ற விரைந்து விடவில்லை. என்ன நடக்கிறது என்று பார்க்க ஆசைப்பட்டு ஓடும் ஆவலைக் கூட யாரும் காண்பிக்கவில்லை. அளவு கடந்த ஆவலில் ஓடிப்போய்த் தங்களை அபாயத்-