வீடு திரும்புகிற போது அந்தப் பெண் சாவித்திரியை அவள் வீடு இருந்த தெருமுனை வரையில் கொண்டு போய் விட்டுவிட்டுப் பூமியும் சித்ராவும் மறுபடி வந்து ஐஸ்ஹவுஸ் அருகே பஸ்ஸுக்காக நின்றபோது பிளாட்பாரத்தில் ஒரு பூக்காரி பூ விற்றுக்கொண்டிருந்தவள் பூமியிடம் வந்து பூ வாங்கச் சொல்லித் தொண தொணத்தாள்.
அப்போது தன் அருகே நிற்கும் சித்ராவைப் பார்த்து விட்டுத்தான். அவள் அப்படித் தொண தொணக்கிறாள் என்று புரிந்து கொண்ட பூமி சிரித்தபடியே அவளுக்குப் பூ வாங்கிக் கொடுத்தான்.
“கலியாணத்திற்குப் போவதென்றுப் புறப்பட்டு வந்தவள் வெறுந்தலையோடு வந்திருக்கிறாயே! இந்தா பூ வைத்துக் கொள்” என்று கூறிக்கொண்டே பூமி பூச்சரத்தை நீட்டியபோது சித்ராவுக்கு மகிழ்ச்சியாயிருந்தது.
“கலியாணத்திற்குத்தான் போவதில்லை என்று முடிவு செய்து விட்டோமே!”
“போகாவிட்டால் என்ன? பூ வைத்துக் கொள்ளக் காரணமா வேண்டும்.”
“இல்லை! வைத்துக்கொள்ளாமல் இருக்கத்தான் காரணங்கள் வேண்டும்.
“என்னோடு கூட வரும்போது நீ பூ வைத்துக் கொண்டு மகிழ்ச்சியாயிருப்பதற்குத்தான் காரணம் இருக்கிறது.
உண்மை ! ஒப்புக்கொள்கிறேன்!”. சித்ரா பூவைத் தலையில் சூடிக்கொண்டாள்.
“பார்த்தாயா சித்ரா! இன்றைய இளைஞனின் காதல் எப்படிப் பட்டதாயிருக்கிறது என்று? ஏதாவது மோதினால் உடனே உடைந்து சிதறிவிடுகிற பிளாஸ்டிக் காதலாயிருக்கிறது. இரண்டு முரடர்களுக்குப் பயந்து காதலியை விட்டு விட்டு ஓடிவிடுகிற இந்தக் காதலனின் காலத்தில் இராமாயணம்