அத்தனை அவசர அவசரமாகப் பறந்துபோயும் அவன் செய்வதற்கு அங்கு எதுவும் மீதமிருக்கவில்லை, அம்மா போய் விட்டாள். நீரிழிவு, இரத்த அழுத்தம், இதயநோய் எல்லாமே அவளைத் தொல்லைப் படுத்தி வந்தன. அத்தனை தொல்லைகளிலிருந்தும் இனி அவளுக்கு நிரந்தர விடுதலை.
அங்கே ஆஸ்பத்திரியில் கொண்டு வந்து சேர்க்கிறவரை கூடத் தாங்கவில்லை, பாதி வழியிலேயே உயிர் பிரிந்து’ விட்டது, ஆஸ்பத்திரி வாசல் வரை கொண்டு போய் விட்டுத் திரும்பினதுதான் மிச்சம், ஸ்டிரெச்சரில் வைத்து வார்டுக் குள் கொண்டு போவதற்காகத் தூக்கும் போதே சொல்லி விட்டார்கள். ‘உள்ளே அட்மிட் செய்து வார்டில் சேர்த்து இவள் இறந்து போயிருப்பதை அவர்கள் கண்டுபிடித்து, மார்ச்சுரிக்கு அனுப்பி உடலைத் திரும்பப் பெற அல்லாட வேண்டியிருக்கும்'-- என்று மற்றவர்கள் முன் கூட்டி எச்சரிக்கவே செய்தார்கள். மரணம் உலகத் தொல்லைகளிலிருந்து விடுதலை என்றால் மார்ச்சுரி மீண்டும் ஒரு சிறைதான். அம்மாவின் உடலைக் குப்பன் பையன் வீட்டுக்குத் திருப்பிக் கொண்டுபோக இருந்தபோது பூமிநாதன் அங்கே போய்ச் சேர்ந்திருந்தான். குப்பன் பையனோடு பேட்டையைச் சேர்ந்த வேறோர் ஆளும் இருந்தான். அவர்கள் இருவரும் மேலே செய்வதறியாது திகைத்துப் போயிருந்தனர். பூமியைப் பார்த்ததும்தான் அவர்களுக்கு நிம்மதியாக மூச்சு வந்தது.
“பாதி வழியிலேயே இட்டார்ரப்பவே மூச்சுப் பிரிஞ்சிடிச்சி.”
துயரம் கொப்புளிக்கும் குரலில் அவர்கள் இருவரும் பூமியிடம் கூறினார்கள். பூமியின் இதயத்தை ஏதோ ஒரு தாங்க முடியாத இழப்பு உணர்ச்சி இறுக்கிப் பிழிந்தது. படிப்பும் வளர்ச்சியும் நாகரிகமும் அவனை வாய்விட்டு அழ முடியாதபடி தடுத்திருந்தாலும் நெஞ்சுக்குள் உள்ளுணர்வு கோவென்று . கதறியழுதது. பாசப் பிணைப்புக்கள் குமுறித் தவித்தன. நினைவு தெரிந்து வயதும் பொறுப்பும் வந்த பின் அவன் காணும் முதல் மரணம் இது. சிங்கப்பூரில் தந்தை இறந்தபோது அவன் நினைவு தெரியாத வயதுச் சிறு பையன்