உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160

சாயங்கால மேகங்கள்

கொண்டு நடப்பதும் இல்லை, சுபாவமாக இருந்தான். சுபாவமாக நல்லது செய்தான். சுபாவமாக உதவினான். சுபாவமாக நன்மையை நாடினான். தீமையை எதிர்த்தான்; புரட்சிமித்திரன் போன்ற இரண்டும் கெட்டான் இளைஞர்கள் எதைச் செய்தாலும் பாராட்டுக்காகவும் கைதட்டலுக்காகவுமே செய்தார்கள்.

சித்ராவைக் கவர வேண்டும் என்பதற்காகவே அவன் கவிதை எழுதினான். சித்ரா சிரித்துக் கைதட்டிப் பாராட்ட வேண்டும் என்பதற்காகவே அவன் ஜோக் அடித்தான் சித்ராவைப் போன்ற பெண்களின் ஞாபகத்தில் தான் ஆண் பிள்ளையாகத் தெரிய வேண்டும் என்பதற்காகவே மட்டும் அவன் வீரதீரனாகப் பாசாங்குகள் செய்தான், இந்தக் கொச்சையான சிறுபிள்ளைத்தனமான முயற்சியை அவள் பூமியிடம் ஒரு போதும் கண்டதில்லை.

அடுத்த சில தினங்களில் நிகழ்ந்த மற்றொரு நிகழ்ச்சியும் அவள் பூமியை நன்றாகப் புரிந்து கொள்ள வாய்ப்பளித்தது. பாலாஜி நகரிலிருந்து சித்ரா அப்பர்சாமி கோயில் தெருப்பகுதிக்குக் குடி வந்த பிறகு காலையிலும் மாலையிலும், முத்தக்காள் மெஸ்ஸில் பூமிக்கும் முத்தக்காளுக்கும் உதவியாகச் சில மணி நேரங்கள் செலவழிக்க முடிந்தது. பெரும்பாலும் அவள் செய்கிற உதவி கேஷ் டேபிளில் அமர்ந்து பில்லுக்குப் பணம் வாங்கிப் போடுகிற உதவியாகத்தான் இருக்கும். ‘பீக் அவர்ஸ்’ என்கிற கூட்ட நேரங்களில் பூமி எந்த வேலையையும் செய்து நிலைமையைச் சமாளிக்கத் தயாராயிருப்பான். அவனால் கேஷில் முளையடித்தது போல் உட்கார முடியாது.

டேபிளில் பரிமாறுவது, பார்ஸல் கட்டிக் கொடுப்பது, ஸ்டோர்ஸ், பர்ச்சேஸ் வேலைகளைக் கவனிப்பது, பாங்க் வேலைகளில் ஈடுபடுவது எதுவும் பூமிக்கு விதிவிலக்கு இல்லை என்றாலும் மெஸ்ஸில் சில வேலைகளை அவர்கள் மற்றவர்களை நம்பி, விடுவதே இல்லை. ‘கேஷ்’ டேபிளில் உட்கார்ந்து பணம் வாங்கிப் போடும் வேலையைப் பூமி, முத்தக்காள், சித்ரா மூவர்