உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாயங்கால மேகங்கள்

161

மட்டுமே செய்வதென்று வைத்துக் கொண்டிருந்தார்கள். மெஸ்ஸில் பழகத் தொடங்கிய புதிதில் கேஷில் அமர்ந்து பணம் வாங்கிப் போட்டுக் கொண்டிருந்த ஒரு மாலை வேளையில் தற்செயலாக அங்கு நடந்து கொண்டிருந்த ஒரு கோளாறு சித்ராவின் கண்ணில் பட்டது.

கேஷ் டேபிளுக்கு எதிராக ஒரு மேஜையில் அமர்ந்து சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருந்த ஓர் ஆளைச் சித்ரா முதலிலிருந்தே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தாள். இரண்டு ஸ்வீட், ஒரு மசாலா தோசை, வடை, காபி இவ்வளவும் சாப்பிட்ட அந்த நபரின் பில் வந்தபோது பில்லில் வெறும் அறுபதுகாசுதான் எழுதியிருந்தது. சித்ரா சந்தேகப் பட்டாள். அந்த வரிசையில் இரண்டு மூன்று டேபிளுக்குப் பொறுப்பாயிருந்த ஒரு சர்வர்மேல் அவளுக்குச் சந்தேகம் தட்டியிருந்தது.

தொடர்ந்து கவனித்த போது அந்தச் சந்தேகம் உறுதிப் பட்டது. சில வாடிக்கையாளர்களுக்கும் அந்த ஊழல் பேர் வழியான சர்வருக்கும் நடுவே ஒரு ரகசிய ஏற்பாடு இருப்பது புரிந்தது. பில்லில் எவ்வளவு குறைத்துப் போடப்படுகிறதோ அந்தத் தொகையைப் போகும்போது ‘டிப்ஸ்’ கொடுப்பதுபோல் சர்வரிடம் கொடுத்து விட்டுப்போய் விட வேண்டும். மற்றவர்கள் கண்டுபிடிக்க முடியாதபடி இது நடந்து கொண்டிருந்தது. சித்ராதான் இதை முதல் முதலாகக் கண்டு பிடித்துப் பூமியிடம் கூறினாள். பூமி மறுநாள் தானே கவனித்து இப்படி நடப்பதை உறுதி செய்துக் கொண்ட பின் பில் போடுற பொறுப்பை சர்வர்களிடம் இருந்து பிரித்துத் தனி ஆளிடம் ஒப்படைத்தான்.

பில் தொகையை இரண்டு முனைகளில் டபிள் செக் செய்ய ஏற்பாடு வந்தது. ஆனாலும் பாதிக்கப்பட்ட் செர்வருக்கு இது சித்ராவால் நடந்த மாறுதல் என்பது தெரிந்து விட்டது. சித்ராவின்மேல் கடுங்கோபமும், எரிச்சலும் அடைந்தான் அவன். எப்படியாவது அவளைப் பழிவாங்க வேண்டும் என்று காத்திருந்தான். இந்த சர்வர் மாதிரி நடுவிலிருந்து லாபம்