சாயங்கால மேகங்கள்
15
மரணம் என்பதின் இழப்பு உணர்ச்சியும் அதன் ஆழங்களும் புரியாததும் பதியாததுமான பருவம் அப்போது.
இப்போது அப்படி இல்லை. நெஞ்சில் ஏதோ இருளாகவும் கனமாகவும் வந்து சூழ்ந்துகொண்டு அழுத்துவது போல் உணர்ந்தான் பூமி. ஏதோ ஒரு வகைத் தனிமை சுற்றிலும் கவிவதாகத் தோன்றியது.
அவனுக்குத் தாயின் உடலை வீட்டிற்குக் கொண்டு போக வேண்டிய அவசியமே ஏற்படவில்லை. அங்கே பூமிக்குச் சுற்றம், உறவு என்று யாரும் கிடையாது. அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் என்றும் எவரும் இல்லை. குப்பன் பையனும் கன்னையனும் போய் அவர்கள் பேட்டையைச் சேர்ந்த கார்ப்பரேஷன் மரணப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து ‘டெத் சர்டிபிகேட்’ வாங்கி வந்தார்கள்.
அவரவர்களுடைய ஆட்டோவை பக்கத்திலேயே ஒரு பெட்ரோல் பங்க்கில் சொல்லி ‘பார்க்’ செய்துவிட்டுத் தெரிந்த டிரைவர் ஒருவனுடைய டாக்ஸியில் பிரேதத்தை கிருஷ்ணாம்பேட்டைக்கு எடுத்துக் கொண்டு போனார்கள். அவர்கள் குடியிருந்த அந்தப் பேட்டையில் அம்மாவுடன் பழகிய நாலைந்து பெண்கள் அழுகையும் புலம்பலும் ஒப்பாரியுமாக மயானத்திற்கு வந்திருந்தார்கள். அவர்களில் தளர்ந்த மூதாட்டி ஒருத்தி.
- "அம்மான்னு சொல்லி இந்தப் பிள்ளை
- அழைக்க ஆளில்லாமல் போயிட்டியே”.
என்று ஒப்பாரி இயற்றித் தன்னருகே இருந்த பூமியைச் சுட்டிக் காட்டி அழுதாள்.
கொள்ளி போடும்போது பூமிக்கும் கண்கலங்கிவிட்டது தள்ளாடிய பூமியைக் கன்னையன் தாங்கிப் பிடித்துக் கொண்டான். கிருஷ்ணாம்பேட்டையிலிருந்து அவர்கள் வீடு திரும்பும் போது பிற்பகல் மூன்றரை மணிக்கு மேலாகியிருந்தது.