சாயங்கால மேகங்கள்
169
மார்க்கெட்டுகளான நகரப் பள்ளிகளில் கல்வி வியாபாரமும் எல்லா வியாபாரங்களையும் போலத்தான் நடந்தது.
இதில் தாங்கள் பலி கடாக்களாகப் பயன்படுவதைத் தேவகியும் மற்ற ஆசிரியைகளும் விரும்பவில்லை. இதைப் பற்றி என்ன மேல் நடவடிக்கை எடுக்கலாம் என்று யோசிப்பதற்காக அந்த ஆசிரியைகளையும் உடனழைத்துக் கொண்டு லெண்டிங் லைப்ரரி பரமசிவம் அண்ணனையும் பூமியையும் சந்திக்க வந்தாள் சித்ரா. பரமசிவத்தை அவருடைய கடையில் பார்த்துப் பேசி விட்டுப் பூமியைப் பார்க்க லஸ்ஸுக்குப் போனார்கள் அவர்கள். வந்தவர்கள் கூட்டமாக இருக்கவே அவர்களிடம் பேசுவதற்காகத் தனிமையை நாடி நாகேஸ்வரராவ் பூங்காவுக்கு அவர்களை அழைத்துச் சென்றான் பூமி.
இரண்டு மூன்று நாட்களாக சித்ரா மெஸ்ஸுக்கு வராதது பற்றிப் பூமி அவளைக் கடிந்து கொண்டான். சின்ன மனஸ்தாபங்களைப் பெரிய விஷயமாக நீடிக்க விட்டுக் கொண்டு சிரமப்படக்கூடாது என்று அவளைக் கண்டித்தான். சித்ரா தான் வந்த காரியத்தைப் பற்றி அவனிடம் விவரித்து விட்டு உடன் இருந்த ஆசிரியைகளை அறிமுகப்படுத்தி வைத்தாள். பிரச்னைகளை விவரித்து விட்டு அவனுடைய யோசனையைக் கேட்டார்கள் அவர்கள்.
அவன் அவர்களைத் திருப்பிக் கேட்டான். “உங்களால் ஒரு தீமையை எதிர்த்துப் போரிட முடியுமா இல்லையா என்பதை முடிவு செய்யு முன் நீங்கள் எவ்வளவிற்கு அதில் உறுதியும் தன் மானமும் உடையவர்கள் என்பது எனக்குத் தெரியவேண்டும். பெரும்பாலான ஆசிரியர்கள் போராட்ட உணர்வும் தன்மானமும் அற்றவர்களாகவே இருப்பது எனக்கு வேதனை பளிக்கிறது.”
“நீங்கள் முந்திய தலைமுறை ஆசிரியர்களைப் பற்றிச் சொல்கிறீர்கள். அவர்கள் அநாவசியமான தியாக உணர்வைச் சுமந்து கொண்டு சிரமப்பட்டார்கள்."