16
சாயங்கால மேகங்கள்
"நாலு நாளைக்கு நீ வண்டி ஓட்ட வேண்டாம். குமாரு வண்டி ரிப்போருக்காக ‘ஷெட்டுலே’ நிக்கப் போவுது. உன் வண்டியை நாலு நாளைக்கி அவன் ஓட்டட்டும்” --என்று கன்னையன் யோசனை கூறினான். கன்னையனின் யோசனையைப் பூமி மறுக்கவில்லை.
மைலாப்பூர் வீரப்பெருமாள் முதலித் தெருவில் ஊடுருவும் ஒரு சிறிய சந்தில் பூமிநாதன் வசித்து வந்தான். சென்னை நகரத்தின் ஆயிரக்கணக்கான ஆட்டோ டாக்ஸி டிரைவர்களில் படித்தவன்--பட்டம் பெற்றவன் என்பதாலும், சிங்கப்பூரில் இருந்தபோதே, கராத்தே-குங்ஃபூவில் நல்ல தேர்ச்சி பெற்றவன் என்பதாலும் பூமிக்கு நண்பர்களும் தோழர்களும் நிறையவே இருந்தனர். சிலர் அவனிடம் கராத்தே-குங்ஃபூ ஆகியவற்றைக் கற்றும் வந்தனர். தகவல் தெரிந்தவர்கள் ஒவ்வொருவராக அவனைத் தேடித் துக்கம் விசாரித்து விட்டுப் போக வந்தனர். இரவு பதினொரு மணி பன்னிரண்டு மணி வரை கூட அந்தக் குறுகிய சந்தில் ஆட்கள் தேடி வந்து அவனது துயரத்தில் பங்கு கொண்டார்கள்.
அன்றிரவு அவனைத் தனியே விட்டுவிடக் கூடாதென்று கன்னையனும் குப்பன் பையனும் அங்கேயே படுத்திருந்தனர், அவர்கள் குறட்டை விட்டுத் தூங்கிய பின்னும் அவனுக்குத் தூக்கம் வரவில்லை. முன்னும் பின்னுமாகத் தொடர்பின்றி மனம் நினைவுகளில் புரண்டது.
காலையில் காபி அருந்த உணவு உண்ண எல்லாவற்றுக்கும்- ‘அடேய் பூமி!’ என்று அன்பொழுக அழைக்கும் அந்தப் பழகிய குரலை இனி அவன் கேட்க முடியாது. அந்தக் குரலையும் குரலுக்குரியவளையும் அவனும் உலகமும் இழந்து பல மணி நேரங்கள் ஆகிவிட்டன. ‘அன்னம் ஊட்டிய தெய்வ மணிக்கரம்’ என்ற பாரதியாரின் கவிதை வரி நினைவுக்கு வந்தது. கூடவே காலையில் அருள்மேரி கான்வென்ட் முகப்பில் சந்தித்த அந்தப் பெண் சித்ராவும் நினைவுக்கு வந்தாள். பாரதியின் நினைவும் கவிதையின் நினைவு வரும் போதெல்லாம் அவளும் நினைவுக்கு வந்தாள். அவளது தலைகுனியாத நிமிர்ந்த