184
சாயங்கால மேகங்கள்
இப்போது மெஸ்ஸில் லாபம் கணிசமாக வந்தது, மெஸ் இருந்த பழைய கால ஓட்டடுக்கு வீட்டுக்காரர் ஆறு மாதத்துக்கு ஒரு தரம் வாடகையை ஏற்றிச் சொல்லித் தொந்தரவு செய்து கொண்டிருந்தார். அந்தப் பழைய காலத்து வீட்டையே விலைக்கு வாங்கி விட்டால்தான் வாடகைப் பிரச்னை தீருமென்று முத்தக்காள் அபிப்ராயப்பட்டாள். பூமிக்கும் அது சரி என்றே தோன்றியது.
சென்னை நகரில் பரபரப்பான வியாபாரப் பகுதிகளில் கையகல இடமானாலும் நாலு லட்சம், ஐந்து லட்சம் என்று விலை கூசாமல் சொன்னார்கள். நெல் விளைகிற நன்செய்க்கு இருந்த விலை மதிப்பைப் போல் பத்து மடங்கு விலை மதிப்பு எதுவுமே விளைய முடியாத வீடு கட்ட முடிந்த களர்நிலத்துக்குக் கூட இருந்தது. விவசாய நிலத்துக்கு இல்லாத விலை மதிப்பு நகரங்களில் உள்ள வீடு கட்டும் மனைகளுக்கு ஏற்பட்டிருந்தது.
நகரங்களில் கால் மனையை விற்ற தொகையை வைத்து வேறு இடங்களில் ஐந்து ஏக்கர் பத்து ஏக்கர் விவசாய நிலம் வாங்கி விடலாம் போலிருந்தது. வீட்டை வாங்கி விட்டால் இடித்துக் கட்டி மாடியில் வரிசையாக நாலைந்து அறைகளைப் போடலாம் என்று முத்தக்காள் எண்ணினாள். அந்த அறைகளில் வேலை பார்க்கும் திருமணமாகாத இளைஞர்களை வாடகைக்கு வைத்துக் கொள்ளலாம் என்ற திட்டம் இருந்தது ஓர் அறைக்கு மூன்று கட்டில்களைப் போட்டு விட்டால் மொத்தம் பத்துப் பதினைந்து பேர் தங்க முடியும். கணிசமாக வாடகையும் வரும். இதற்காக வீட்டுக்காரருடன் பேரம் நடந்து கொண்டிருந்தது.
அந்த வாரம் பிரபலமான ஜப்பானியக் கராத்தே வீரர் ஒருவர் பம்பாய் செல்கிற வழியில் சென்னையில் இறங்கி இரண்டு நாள் தங்குவதாக இருந்தது. மாநில உடற்பயிற்சிக் கழகம் அவருக்குச் சென்னையில் வரவேற்பு அளிக்க முடிவு செய்திருந்தது. அந்த ஜப்பானியக் கராத்தே வீரர் சிங்கப்பூர்'