பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/191

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சாயங்கால மேகங்கள்
189
 

அவன் கூறிய விவரங்களிலிருந்து அந்தப் பையன் ஒரு கல்லூரி மாணவன் என்றும் வசதியே அற்ற ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்றும் தெரிந்தது. தானும் தன்னைப் போன்ற பலரும் லஸ் பகுதியைச் சேர்ந்த ஒரு பேட்டை ரவுடியின் தூண்டுதலால் இதில் ஈடுபட்டதாகவும் திருடுவதை எல்லாம் அப்படியே அந்தப் பேட்டை ரவுடியிடம் கொண்டு போய்க் கொடுத்து விட்டால் அவன் கொடுக்கிற பத்தோ இருபதோ கூலியாகக் கிடைக்கும் என்றும் தெரிவித்தான்.

லஸ் பகுதியில் நடந்த அத்தனை திருட்டுக்களையும் தான் செய்யவில்லையென்றாலும், மெஸ்ஸில் இதற்கு முன்பு திருடியது மட்டும் தானே என்றும் அந்தப் பையன் ஒப்புக் கொண்டான்.

“படிக்கிற பையன்களை. இப்படிச் சின்ன வயசிலேயே கெடுத்து வைத்தால், நாடு எப்படி, உருப்படும்?” என்றாள் அருகில் இருந்த சித்ரா.

“மொளைச்சு மூணு இலை விடலே! அதற்குள்ளே இப்பிடியா தலை எடுக்கணும்?” என்று கைகளைச் சொடக்கினாள் முத்தக்காள். பூமி அதற்குப் பதில் சொன்னான்.

“என்ன செய்வது! இந்நாட்டில் ஏழைகளிலும் திருடுபவர்கள் இருக்கிறார்கள். பணக்காரர்களிலும் திருடுபவர்கள் இருக்கிறார்கள். வறுமையினால் நிகழும் திருட்டுக்களை விட, வளமையினாலும் வசதியினாலுமே அதிகத் திருட்டுக்கள் : நிகழுகின்றன!”

பூமி இவ்வாறு பேசியதும் அதிகம் பயந்து போயிருந்த அந்த இளைஞனுக்குக் கொஞ்சம் நம்பிக்கை வந்தது. அவன் பூமியிடம் கெஞ்சும் குரலில் மன்றாடினான்.

“கல்லூரிக்குப் போகிற நேரம் தவிரக் காலை மாலை வேளைகளில் செய்வதற்குக் கெளரவமான வேலை: ஏதாவது கிடைத்திருந்தால் இந்தப் பாவத்தில் நான் இறங்கியே இருக்க மாட்டேன் சார் என்னை மன்னியுங்கள்."