உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாயங்கால மேகங்கள்

191

கூடாது. அவன் திருந்த ஒரு வாய்ப்புத் தந்து பார்க்கிற அந்த அளவு பெருந்தன்மையாவது நமக்கு இருக்க வேண்டியது அவசியம்.”

மற்றவர்கள் எவ்வளவோ சொல்லியும் கேளாமல் பூமி அந்தக் கல்லூரி மாணவனை மன்னித்துப் படிப்பு நேரம் போக மீதி நேரங்களில் மெஸ் வேலைகளைச் செய்ய அனுமதித்தான்.. நாளடைவில் அவன் திருந்தியும் மாறியும் ஒழுங்காகிவிட்டான். ஆனால் தன் பழைய குருவாக இருந்த ரெளடியை எண்ணி அடிக்கடி நடுங்கினான். அதைப் பற்றிப் பேச்சு எடுப்பதையும் அவன் விரும்புவதில்லை. அதை மறப்பதையே அவன் அதிகம் விரும்பினான்.

ஒரு நாள் பிற்பகலில் அந்தப் பையன் மெஸ்ஸில் சர்வ் செய்து கொண்டிருந்த போது நாலைந்து பேர் சூழ உள்ளே சாப்பிட வந்த ஒரு முரட்டு ஆளைப் பார்த்ததும் பயந்து உள்ளே ஓடிவிட்டதைப் பூமியே கண்டுவிட்டான்.

உள்ளே பின் தொடர்ந்து போய், “ஏன் இப்படிப் பயந்து ஓடி ஒளிகிறாய்? யார் உன்னை என்ன செய்து விடுவார்கள்?” என்று பூமி அந்தப் பையனைக் கேட்டான்.

“ஹாலில் ஒரு கும்பல் டிபன் சாப்பிட வந்திருக்கிறது. அந்தக் கும்பல் எழுந்திருந்து வெளியேறும் வரை நான் அந்தப் பக்கம் வர முடியாது” என்று நடுங்கினான் பையன்.

பூமிக்கு ஆத்திரம் மூண்டது. பையன் வந்து அடையாளம். காட்டாவிட்டாலும் அந்த ரெளடிக் கும்பலையும் அதன் தலைவனையும் பூமி அடையாளம் புரிந்துகொண்டு விட்டான். கும்பலோடு வந்திருந்த ஓர் ஆளிடம் மிகவும் மரியாதையாக விசாரிப்பது போல் ‘தலைவர் யாருங்க’ என்று. அந்த முரடனைப் பற்றிப் பூமியே விசாரித்தான். விவரம் தெரிந்தது. தெரிந்த விவரம் பூமியை ஆச்சரியப்பட வைத்ததை விட அதிகமாக அதிர்ச்சியடைய வைத்தது.