பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



32

இன்றைய சமூகத்தின் மிகப் பெரிய பலவீனம் என்னவென்றல் நல்லவர்களை விரோதித்துக் கொள்ள எல்லாருமே தயாராயிருக்கிறார்கள். தீயவர்களை விரோதித்துக்கொள்ள யாருமே தயாராயில்லை. தீமை கிளை பரப்பி வளர்கிறது. நன்மை சிதைந்து நலிகிறது.


வ்வொரு, சமூக விரோதக் கூட்டத்திற்கும் பின்னணியில் ஒரு செல்வாக்குள்ள பணவசதி படைத்த தலைமை இருந்தது. ஒவ்வொரு பெரிய நகரத்திலும் ‘மாஃபியா’ கும்பலுக்கு இப்படி ஒரு சூத்திரதாரி இருந்தான்.

சாதாரணமான கொச்சை மனிதர்கள், அடியாட்கள்தான் முன்னால் தெரிந்தார்களே ஒழிய அவர்களுக்கு ஆணிவேராக இருந்த நாசூக்கான அயோக்கியர்கள் முன்னால் தெரியாமல் மறைந்து பின் நின்றார்கள்.

பூமி மெஸ்ஸில் பார்த்த மனிதனைப் போல் பல மனிதர்களைக் கட்டி ஆளும் வேறொரு பெரிய மனிதன் இருப்பது தெரிந்தது. அந்தப் பெரிய மனிதன் மாநிலத்தில் செல்வாக்கோடு இருந்த ஓர் அரசியல் கட்சியின் வட்டாரத் தலைமையையும் பெற்றிருந்தான். கள்ளச் சாராயம், கொலை, கொள்ளை, திருட்டு, எதில் கைவைத்தாலும் அது அவனில் போய் முடிந்தது. அவனே அனைத்துக்கும் மூலாதாரமாக இருந்தான்.

பூமி மெஸ்ஸில் வேலைக்குச் சேர்த்துக் கொண்டிருந்த பையன் யாரைப் பார்த்துப் பயந்தானோ அவனைப்போல் பல அடியாட்களுக்குத் தலைவனாக அந்த அரசியல் பிரமுகன் இருந்தான். முன்பு ஒரு தடவை மெஸ்ஸில் நன்கொடை வசூலுக்கு வந்து கலாட்டா செய்து சேதம் விளைவித்ததுகூட இந்த ஆளின் ஏவலால்தான் என்பது தெரியவந்தது.