சாயங்காள மேகங்கள்
197
ஐந்து நட்சத்திர ஹோட்டலின் ரிஸப்ஷன் பகுதி போல் ஒரு வரவேற்பு அறை இருந்தது. தலையை ‘பாப்’ செய்து கொண் டிருந்த ஒரு கொழுத்த பெண் வரவேற்பு நாற்காலியில் அமர்ந்திருந்தாள்.
அவளுடைய உதடுகள் இரத்தச் சிவப்பில் சாயம் பூசப்பட்டு மின்னின. அவளுக்கு அங்கே பக்கத்துக்கு ஒருவராக இரண்டு பீமசேனர்கள் நின்றார்கள். உள்ளே நுழைகிற எவனுக்கும் உடனே பயத்தையும் தாழ்வு மனப்பான்மையையும் உண்டாக்குகிற முரட்டுத் தோற்றம் அவர்களுக்கு. பூமி நாசூக்காகத்தான் பேச்சை ஆரம்பித்தான்.
“மிஸ்டர் மன்னார்சாமியைப் பார்க்க வேண்டும்.”
“நீங்கள்..........."-- அவள் பதிலுக்குப் பூமியைக் கேட்டாள். ‘மன்னாரு’ உள்ளே இருக்கிறானா இல்லையா என்பதைச் சொல்லாமலே தந்திரமாக இவனைப் பற்றி விசாரித்தாள் அவள்.
“அவருடைய பழைய சிநேகிதன். அவர் பார்க்க வரச் சொல்லித்தான் வந்திருக்கிறேன்.”
“இங்கே தான் வரச் சொன்னாரா?”
“ஆமாம்! இங்கே தான் வரச்சொன்னார்.”
பின் விளைவு என்ன ஆகும், எது நடக்கும் என்பதைப் பற்றி எல்லாம் .. கவலைப்படாமல் பூமி துணிந்து இப்படிச் சொன்னான், அவள் அவனைக் கூர்ந்து பார்த்தாள் . தயங்கினாள். அப்புறம், பக்கத்திலிருந்த ‘இண்டர்காம்’ ஃபோனை எடுத்து பட்டனை அமுக்கி உள்ளே யாருடனோ பேசினாள். ஃபோனை வைத்து விட்டுப் பூமியை நிமிர்ந்து பார்த்து உட்காரச் சொன்னாள்.