சாயங்கால மேகங்கள்
209
வெடவெட என்று ஒல்லியாக ஒரு பையன் ஸ்கூட்டரில் வருகிறான். அவனை நாலைந்து பேராகச் சேர்ந்து தாக்கி விடுவது சுலபம் என்று நினைத்த முரடர்கள் மலைத்துப் போய்த் திணறும்படி காரியங்கள் நடந்தன.
பூமி அவர்களுக்குச் சரியான பாடம் புகட்டினான். அங்கே அதில் ஒருவன் பூமிக்குப் பழக்கமானவன் போல் தோன்றினான். அவன் பழைய நாட்களில் தன்னோடு பழகிய ஓர் ஆட்டோ டிரைவர் என்பது சில விநாடிகளில் பூமிக்கு நினைவு வந்தது, பூமியை அடையாளம் தெரிந்ததுமே, அவன் ஓடி விட்டான். தன்னிடம் அந்த ஆள் சிறிது காலம் கராத்தே பழகியதும் பூமிக்கு ஞாபகம் இருந்தது.
எதிரே கும்பலாக வழி மறித்தவர்களை கண்டு சித்ரா முதலில் பயந்தாள். எவ்வளவுதான் பூமி கெட்டிக்காரனாக இருந்தாலும் இந்தக் குண்டர்களை எப்படிச் சமாளிக்கப் போகிறான் என்று தயக்கமிருந்தது அவளுக்கு. அவர்களிடம் இருந்து தப்பி மீண்டு போக வேண்டுமே என்று ஊரிலுள்ள தெய்வங்களை எல்லாம் வேண்டிக் கொண்டாள் அவள். ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொருவருக்கு நன்மை செய்யப் போய் பூமி தான் அபாயத்தில் சிக்கிக் கொள்ளுகிறானே என்று கவலைப்பட்டாள் அவள்.
எந்த வேலின் நுனி மிகவும் கூராகத் தீட்டப்பட்டிருகிறதோ அதில்தான் மற்றப்பொருள்கள் குத்தப்பட்டுச் சிக்குகின்றன. மழுங்கிய வேலின் முனையில் எதுவுமே வந்து சிக்குவதில்லை. தீரர்களுக்குத்தான் எதிர்ப்புக்களும் அபாயங்களும் காத்திருக்கின்றன. மந்தபுத்தியும் கோழைத்தனமும் உள்ளவர்களுக்கு எந்த முனையிலிருந்தும் யாதோர் எதிர்ப்பும் அபாயமும் வாழ்வில் வருவதில்லை. பூமியின் வாழ்விலுள்ள அத்தனை அபாயங்கள் புரட்சிமித்திரன் போன்ற சவர்லே இம்ப்பாலா ஆட்களின் வாழ்வில் வருவதில்லை என்பதை அவள் உணர்ந்தாள்.