பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

212

சாயங்கால மேகங்கள்

முன்பு ஒருமுறை குண்டர்கள் முத்தக்காளின் ஓட்டலைச் சூறையாடியபோது, அவளும் தன்னிடம் இதே மாதிரியில் அலுத்துக் கொண்டது பூமிக்கு நினைவு வந்தது.

தான் உதவி செய்ய முன்சென்று தன்னைச் சிரமப்படுத்திக் கொண்டு தலையிடுகிற இடங்களில் எல்லாம் இப்படி நேர்வது பூமிக்கு உள்ளுற உறுத்தியது.

லஞ்சத்தை எதிர்த்து ஒழிப்பதைவிட லஞ்சம் கொடுத்து அட்ஜஸ்ட் செய்துகொண்டாவது தொடர்ந்து ஓட்டலை நடத்த வேண்டுமென்று முத்தக்காள் நினைப்பதும், திருடர்களை எதிர்த்து அவர்களிடமிருந்து விலக்கி மகனைத் திருத்துவதை விட அவன் திருடர்களோடாவது இருந்து உயிருக்கு அபாயமின்றி வாழ்ந்தால் போதும் என்று காணாமல் போன பையனின் தாய் நினைப்பதும் இப்போது அவனைச் சிந்திக்க வைத்தன.

உலகில் பெரும்பாலான சராசரி மக்கள் எப்படியாவது வாழ வேண்டுமென்று நினைக்கிறார்களே ஒழிய, இப்படித்தான் வாழவேண்டும் என்று எந்த இலட்சியமும் அவர்களுக்கு இருப்பதில்லை.

இப்படி எந்த இலட்சியமும் இல்லாத பெரும்பாலானவர்களுக்கு இலட்சியங்களும், இலட்சியவாதிகளும் அர்த்த மற்றவைகளாகவும் அர்த்தமற்றவர்களாகவும் தோன்றுவதில் ஆச்சரியமில்லை. சித்ரா அந்தத் தாயைச் சமாதானப்படுத்த முயன்றாள்.

“உங்க பையனை எப்படியும் கண்டுபிடிச்சிடலாம். அது வரை இங்கேயே இருங்க” என்று மெஸ்ஸின் பின் பக்கத்து , அறையில் கொண்டு போய் அமர்த்தி தேறுதல் கூறி அவளைக் காப்பி சாப்பிட வைத்தாள் சித்ரா.

பின்பு அவளும் பூமியும் சேர்ந்தே அந்தத் தாயிடம் அவள் பையனைப் பற்றிய தேவையான பல விவரங்களை விசாரித்தறிந்தார்கள். அவன் எங்கெங்கே போவான், யார் யாரோடு பழகுவான், அவனுடைய கல்லூரி நண்பர்கள் யார்