பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/215

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


யார் என்ற விவரங்களிலிருந்து ஏதாவது தெரியலாம் என்பது அவர்கள் எண்ணமாயிருந்தது.

ஆனால் அந்தப் பையனின் பழக்கவழக்கங்கள், வெளி வட்டார நண்பர்கள் ஆகியவை பற்றி அவனுடைய தாய்க்கே மிகவும் குறைவான விவரங்கள்தான் தெரிந்திருந்தன.

“எப்படியாவது எம்மவனைத் தேடி உயிரோட எங்கிட்டே ஒப்படையுங்க ஐய” என்றுதான் அந்தத் தாய். திரும்பத் திரும்ப ஒரே வாக்கியத்தைச் சொல்லி ஒப்பாரி வைத்துப் புலம்பி அழுதாளே ஒழிய, அவர்களுக்குப் பையனைக் கண்டு பிடிப்பதில் பயன்படுகிற விவரம் எதையும் கூறத் தயாராயில்லை அவள்,

சித்ராவின் பொறுப்பில் பூமி அவளை ஒப்படைத்து விட்டுப் புறப்பட்டான். காலையில் தன்னை வழிமறித்துத் தாக்கிய குண்டர்களில் தன்னிடம் சிறிது காலம் கராத்தே படித்த ஓர் ஆட்டோ டிரைவர் இருந்ததை ஞாபகப்படுத்திக்கொண்ட பூமி அவனை எப்படியாவது முதலில் சந்திக்க வேண்டும் என்று முயன்றான். லஸ் முனையிலிருந்த ஆட்டோ ஸ்டாண்டில் டிரைவர்களை விசாரித்தபோது அந்த ஆள் ராக்கியப்பு முதலி தெருவுக்குப் பக்கத்திலுள்ள ஒரு குடிசைப்பகுதியில் இருப்பதாகத் தெரிய வந்தது. பூமி அங்கே அவனைத் தேடிச்சென்றான்.

அவன் அந்தக் குடிசை வாசலுக்குப் போனபோது உள்ளே அவனுக்குத் தேவையான அதே ஆளின் குரல் கேட்டது. பூமி கூப்பிட்டதும் ஒரு பெண்--அவன் மனைவியாக இருக்க வேண்டும் வெளியே தலை நீட்டி “யாருங்க, இன்னா;. வேணும்?” என்று பூமியை விசாரித்தாள்.

“கராத்தே வாத்தியார் பூமிநாதன்னு சொல்லும்மா?” என்று பூமி கூறியதைக் கேட்டுக்கொண்டு உள்ளே போய்ச் சில வினாடிகளில் மீண்டும் வெளியே வந்து. “அவரு இல்லீங்ககளே” என்று அந்தப் பெண் துணிந்து பொய் சொன்னாள்.