சாயங்கால மேகங்கள்
219
அவன் பிற்பகல் வரை திரும்பவே இல்லை. முத்தக்காளின் ஏச்சுப் பேச்சுக்களுக்குப் பதில் சொல்லிவிடாமலே அவற்றை கேட்டுப் பொறுத்துக் கொண்டு அங்கே கழியும் ஒவ்வொரு வினாடியும் சித்ராவுக்கு நரகமாகத் தோன்றியது. ஏன்தான் இதில் வந்து சிக்கிக் கொண்டோம் என்றெண்ணித் தவித்தாள் அவள்.
பூமி திரும்புவதற்குத் தாமதமாவது வேறு அவளுடைய கவலையை வளர்த்தது. தேடிப்போன இடத்தில் அவனுக்கு என்ன என்ன தொல்லையோ என்று வேறு சந்தேகமாயிருந்தது.
தங்கள் ஹோட்டலில் வேலை பார்த்த ஒரு பையன் ஹோட்டல் எல்லைக்கு வெளியே எங்கோ காணாமல் போனதற்காகப் பூமியும், சித்ராவும் இவ்வளவு அக்கறை எடுத்துக் கொண்டது முத்தக்காளுக்கு அறவே பிடிக்கவில்லை. இம்மாதிரிக் காரியங்களைப் பூமி செய்வது அவளுக்கு எரிச்சிலூட்டியது.
கடைசியில் மாலை ஐந்தரை மணி சுமாருக்கு அலைந்து களைத்த சோர்வுடன் பூமி திரும்பி வந்தான். “போன காரியம் என்ன ஆயிற்று” என்று சித்ரா அவனைக் கவலையோடு கேட்டாள்.
“பையனைப் பற்றி ஒரு விவரமும் தெரியவில்லை! என்ன ஆயிற்றென்று கண்டு பிடிப்பதும் சிரமமாயிருக்கிறது” என்று சிறிது தயக்கத்தோடு பதில் வந்தது பூமியிடமிருந்து.
பணம் சேரத் தொடங்கியதும் சுயநலமும், மற்றவர்கள் மற்றவற்றைப் பற்றிய பொதுநல அக்கறையிற் குறைவும் அடைந்து பார்வையைக் குறுக்கிக் கொள்வதுதான் சிலருடைய வழக்கம்.