உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

220

சாயங்கால மேகங்கள்

தான் யாருக்கு நன்மை செய்யப் புகுந்தாலும் அது இப்படி முடிகிறதே என்பதில் பூமிக்கும் வருத்தம் இருந்தது. தீயவர்களின் நட்பினாலும் தூண்டுதலாலும் திருடத் தொடங்கியிருந்த ஒரு பையனைத் திருத்தி நல்வழிக்குக் கொண்டுவர முயன்ற தனக்கு இப்படி ஒரு சோதனையா என்பதை நினைக்கும் போது அவன் சிறிது கலங்கத்தான் செய்தான்.

சாதாரணமாக எதிலும் அதிகம் தளராத பூமியே இதில் தளர்ந்து போயிருந்தான், உடனடியாக வெற்றி கிடைக்க வில்லையே என்பதற்காக அவன் எதிலும் சோர்ந்து போவது வழக்கமில்லையானாலும், பையனின் தாய்க்கு என்ன பதில் சொல்லி எப்படி ஆறுதல் கூறுவதென்பது இப்போது அவனை மலைக்கச் செய்வதற்குப் போதுமானதாயிருந்தது.

பூமியின் சோர்வைப் புரிந்துகொண்ட சித்ரா, அவன் வெளியே போயிருந்தபோது அங்கே தனக்கும் முத்தாக்காகளுக்கும் நடந்த தகராறு எதையும் அப்போது அவனிடம் கூறவில்லை. அதை அவன் அநுமானிக்கும்படி கூட அவள் நடந்து கொள்ளவில்லை. ஆனால் முத்தக்காள் ‘உம்’ மென்று முகத்தைத் தூக்கிகொண்டு இருந்தாள். அதிலிருந்து பூமி அங்கே ஏதோ தகராறு நடந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டான். ஆனால் எதற்காக யாருக்கும் யாருக்கும் தகராறு நடந்திருக்கிறது என்பதை அவனால் அறிய முடியவில்லை.

உள்ளே சரக்கு மாஸ்டரோ, வேறு வேலையாட்களோ பத்து ரூபாய் அட்வான்ஸ் கேட்டால் கூட அவள் முகத்தைத் தூக்கிகொள்வது வழக்கம். இன்றும் அதுபோல் ஏதாவது நடந்திருக்கலாம் என்று கூட அவன் எண்ண இடமிருந்தது. ஆனால் நீண்ட நேரம் அந்த அநுமானம் அல்லது சந்தேகம் நீடிக்கவில்லை. முத்தக்காள் தேரேயே அவனிடம் சண்டைக்கு வந்துவிட்டாள்.

“யாரோ காணாமப் போயிட்டாங்கன்னு நாம பொழுதன்னைக்கும் தேடி அலைஞ்சு கட்டுபடியாகுமா?” என்று அவனையே குறை கூறினாள்.