அறியாமை, பணத்தாசை, பொறாமை மூன்றும் ஒன்று சேர்ந்துவிட்டால் அப்புறம் உண்மையைக் கண்களிலிருந்து மறைப் பதற்கு வேறு எதுவுமே தேவையில்லை.
பூத்தொடுப்பதை விட வேகமாக அவள் மனம் உள்ளே நினைவுகளைத் தொடுத்து அலங்கரித்துக் கொண்டிருக்கிறது என்பதை முகத்திலிருந்து கண்டறிய முடிந்தது. முத்தக்காள் தன் வார்த்தைகளின் மூலம் சித்ராவின் பூப்போன்ற இதயத்தை எவ்வளவு தூரம் குத்திக் கிழித்துக் குதறியிருக்கிறாள் என்பதைப் பூமியால் அப்போது உய்த்துணர முடிந்தது.
அந்த அநுமானமே அவன் மனத்தை என்னவோ செய்தது. தான் வெளியே சென்றிருந்த நேரத்தில் சொற்களாகிய கூரிய அம்புகளால் முத்தக்காள் சித்ராவைத் துளைத்தெடுத்து அவள் இதயத்தை ரணமாக்கியிருக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டு பூமி அவள் மீது பரிவு கொண்டிருந்தான். அவன் சிரித்துக் கொண்டே அப்போது அவளைக் கேட்டான்.
“உலகம் எதையுமே கவனிக்காமல் எங்கோ பராக்குப் பார்த்துக் கொண்டிருப்பது போல் நமக்குத் தோன்றுகிறது. ஆனால் அது உண்மையில்லை. நெருங்கிப் பழகுகிற அல்லது பழக முயல்கிற ஒவ்வோர் ஆணையும் பெண்ணையும் அது விஷமத்தனமான. கண்களோடு கூர்ந்து கவனிக்கத் தவறுவ தில்லை.”
“உண்மைதான்! அசத்தியமாகப் பழகுகிறவர்களை மட்டுமின்றிச் சத்தியமாகவும் நியாயமாகவும் பழகுகிறவர்களையும் கூட அது விஷமத்தனமாகத்தான் பார்க்கிறது."