பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/229

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சாயங்கால மேகங்கள்
227
 

இழந்த நடுத்தர வயதுப் பெண் அப்படித்தான் இருக்க வேண் டிய நிலைமை என்றாலே போதும்.”

“உலகில் முதன் முதலில் ஆணும் பெண்ணும் கவலைப் படாமல் பழகியிருக்க வேண்டும். இப்படி வம்பும், கலகமும், வந்த பிறகே தற்காப்புக்காகத் திருமணம் என்ற ஏற்பாடும் வந்திருக்க முடியும்”

“கதவுக்குப் பூட்டு, கடனுக்கு உத்திரவாதப் பத்திரம், நீதிக்கு மன்றம் என்றெல்லாம் ஏற்பட்டது போலத்தான் திருமணமும் என்கிறீர்களா?”

“நான் சொல்லவில்லை. பழைய தமிழ்ப் புலவர்களே சொல்லி விட்டுப் போயிருக்கிறார்கள். பொய்யும், வழுவும். ஏமாற்றுதலும் தோன்றி நம்பிக்கையின்மை ஏற்பட்ட பின்பே கலியாணம் என்ற உத்திரவாதம் உலகில் ஏற்பட்டதாம்.”

“நீங்களும் நானும் ஒருவரை ஒருவர் எவ்வளவுதான் நம்பினாலும் முத்தக்காள் நம் இருவரையுமே நம்பவில்லை.”

“உண்மையில் அவள் தன்னையே நம்பவில்லை. நான் அப்படிப்பட்டவர்கள் மேல் கோபப்படுவதற்குப் பதில் பரிதாபப் படவே செய்கிறேன்.”

“அறிவுள்ள யாவரும் அறியாமை நிறைந்தவர்களுக்காக இரங்குவதும், பரிதாப்படுவதும் ஒரு சமூக நாகரிகம்.”

அவளுடைய இந்தப் பொறுமை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரு பெண்ணுடன் இன்னொரு பெண்ணுக்கு உள்ள சர்ச்சையில் இருவருமே சண்டை போடுகிறவர்களாக இருந்து விட்டால் அதை முடித்து வைப்பதும் தீர்த்து வைப்பதும் சிரமமான காரியங்கள். அந்த வரையில் முத்தக்காளிடம் இருந்த அநாகரிகம் சித்ராவிடம் இல்லை என்பது அவனுக்கு நிம்மதியளித்தது.

அன்று அவனும் சித்ராவும் வழக்கத்தை விட அதிகமாகப் பல விஷயங்களைப் பற்றி மனத்திறந்து பேசிக் கொண்டார்கள்.