உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

230

சாயங்கால மேகங்கள்

ஒருவன் கல்லாப்பெட்டியில் அமர்ந்து கேஷ் டேபிள் நிர்வாகத்தைக் கவனித்துக் கொண்டிருந்தான். முத்தக்காள் அவனருகே நின்று ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள்

பூமிக்கு மிகவும் வேண்டிய சர்வர் ஒருவன் பூமி கேட்காமலேயே அவனருகில் வந்து தணிந்த குரலில். விவரம் தெரிவித்தான். பூமி உள்ளே வந்ததைப் பார்த்தும் முத்தக்காள் பாராமுகமாக இருந்தது தெரிந்தது.

“அவன் அம்மாவுக்குத் தூரத்து உறவுக்காரப் பையனாம். ஒத்தாசையா இருந்து கவனிச்சிக்கணும்னு தந்தி குடுத்து வர வழைச்சிருக்காங்க. இன்னிக்கிக் காலம்பா ரயில்லே தான் இங்கே வந்து சேர்ந்தான்.

பூமி, சித்ராவின் கணிப்புப் பலித்து விட்டதை எண்ணி வியந்தான். பெண்களின் மனப்போக்கு ஆண்களுக்குப் புரிவதைவிட வேகமாகப் பெண்களுக்குப் புரிந்துவிடும் அதிசயத்தை உணர்ந்து திகைத்தான் அவன்.

தன்னைவிட விரைந்து முத்தக்காளுடைய மனப்போக்கைச் சித்ரா புரிந்து கொண்டு விட்டதை அவனால் வியவாமலிருக்க முடியவில்லை. ‘சரி! இதை நாம் பெரிதாகப் பொருட்படுத்த வேண்டியதில்லை. போகப் போகப் பார்க்கலாம்’ என்று ஸ்டோர் ரூம் பக்கம் போனான் பூமி. ஸ்டோர் ரூம் பூட்டியிருந்தது.

“ஸ்டோர் ரூம் சாவி கேஷ்டேபிளிலே இருக்குங்க” என்றான் சரக்கு மாஸ்டர்.

“போய் வாங்கி வா” என்று அங்கிருந்து ஒரு வேலையாளை அனுப்பிவிட்டு அறைவாசலில் காத்திருந்தான் பூமி. சாவியை வாங்கச் சென்றவர் உடனே திரும்பி வரவில்லை, சிறிது நேரம் பிடித்தது. நேரம் ஆக ஆகப் பூமிக்குப் பொறுமை பறிபோய் எரிச்சல் மூண்டது.