அறியாமையும், பணத்தின் மேலே பேராசையும் சேர்ந்து விட்டால் மனிதர்கள் எவ்வளவு கெட்டவர்களாக வேண்டுமானாலும் மாறிவிடுவார்கள்.
ஸ்டோர் ரூம் சாவி வருவதற்குத் தாமதம் ஆகியது. சிரமப்படுகிற காலத்தில், சத்தியவான்களாகவும், நியாயவாதிகளாகவும் இருந்து பின்பு வசதிகள் வந்ததும் மாறி விடுகிற பலரைப் பூமி அறிந்திருந்தான். இப்போது முத்தக்காளும் அந்தப் வரிசையில் சேர்ந்திருப்பதை அவன் வருத்தத்தோடு உணரவும் புரிந்து கொள்ளவும் முடிந்தது.
அடிப்படை நன்றி, விசுவாசம் போன்ற உன்னத உணர்வுகளைக் கூடப் பணமும் வசதிகளும் மாற்றிக் கெடுத்து விடுவதை உணர முடிந்தது. படிப்பறிவும் விசால மனமும் இல்லாத முத்தக்காள் போன்றவர்கள் அப்படித்தான் இருக்கமுடியும் என்று அவன் தன்னைத்தானே தேற்றிக் கொள்ள வேண்டியிருந்தது. சிலருக்கு அநுபவங்களாலாவது மனம் விசாலமடையும். முத்தக்காளை அநுபவங்கள் கூட மாற்ற முடியவில்லை என்று தெரிந்தது. எவ்வளவு நாள் ஊறினாலும் கருங்கல் தண்ணீரில் கரைத்து விடாது தானே?
சொந்தக்காரப் பையனை முத்தக்காள் அழைத்து வந்திருப்பது பற்றிக் கூடப் பூமி கவலைப்படவில்லை, அப்படிச் செய்யப் போவதாக அவள் தன்னிடம் சகஜமாக ஒருவார்த்தை கூட முன் தகவல் சொல்லாத்திலிருந்து தன் மேல் அநாவசியமாக அவள் எவ்வளவு அவநம்பிக்கையை வளர்த்துக் கொண்டிருக்கிறாள் என்பதும் புரிந்தது.
இதற்காக அவன் மனம். அதிர்ந்து போய் ஒடுங்கிவிடவில்லை. என்றாலும் மனிதர்கள் எவ்வளவு சிறுமை நிறைந்த