உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

232

சாயங்கால மேகங்கள்

வர்களாக இருக்கிறார்கள் என்பதை விளங்கிக்கொள்ள இந்தச் சந்தர்ப்பம் அவனுக்கு உதவியது. முத்தக்காள் போன்றவர்களோடு ஒத்துழைக்க வேண்டும் என்று சித்ராவைப் போன்ற மனம் விசாலமடைந்த பெண்ணைக் கூடத் தான் வற்புறுத்தி யிருப்பது அவனுக்கு நினைவு வந்தது.

தன்னைப் போலன்றி ஒரு பெண்ணுக்குப் பெண் என்ற முறையில் சித்ரா முத்தக்காளை மிகவும் சரியாகவே எடை போட்டுப் புரிந்து கொண்டிருப்பது பூமிக்கு வியப்பளித்தது. பாம்பின் கால் பாம்பறியும் என்பதுபோல் பெண்கள் ஏனைய பெண்களை மிகவும் சரியாகவே புரிந்து கொண்டுவிடுகிறார்கள். ஆண்கள் தவறான கணிப்புக்களைக் கொடுத்துப் பெண்களைக் குழப்பினாலும்கூட அவர்கள் குழம்புவதில்லை.

பூமி விரும்புகிறான் என்பதற்காக சித்ரா முத்தக்காளுடைய மெஸ்ஸுக்கு வந்து போய்க் கொண்டிருந்தாளே ஒழியப் பல நாட்களுக்கு முன்பே முத்தக்காளைப் பற்றிய தன் அநுமானங்களையும் அதிருப்திகளையும் அவன் மறைக்காமல் பூமியிடம் வெளியிட்டு அவனையும் எச்சரித்திருந்தாள். அவன் தான் அந்த எச்சரிக்கையை எல்லாம் அப்போது ஏற்கவில்லை.

சொந்தச் சேமிப்பிலிருத்து கணக்குப் பாராமல் தன் பணத்தை எடுத்துப் போட்டுச் செலவழித்து விட்டு இப்படி. ஓர் அநுபவத்தை அடைவது அவனுக்கு எரிச்சலூட்டியது. தன்னைப் போல் உடல் வலிமையும், மனவலிமையும், வாய்ந்த ஒரு மனிதன் பக்கபலமாக நின்று தாங்கியிருக்கவில்லையென்றால் அந்த உணவு விடுதி நடைபெறாமலே நின்று போயிருப்பதற்கான சாத்தியக் கூறுகள்தான் அதிகம் என்று அவனுக்குத் தெரியும். முத்தக்காளுக்கும் அது தெரிந்துதான் இருக்கவேண்டும். ஆனால் அவள் இன்று அதை வசதியாக மறந்திருந்தாள். நினைக்க நினைக்க அவனுக்கு மனம் வேதனைப்பட்டது. அங்கே இருப்புக் கொள்ளவில்லை.