உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பழகறது என்னை நம்பிக்கையாகக் கேஷ் டேபிளில் உட்காரச் சொல்றது எதுவுமே அவங்களுக்குப் பிடிக்கல்லே. அதைக் காமிக்கச் சமயம் பார்த்துக்கிட்டிருந்தாங்க.... இப்போ சமயம் வந்தாச்சு.” சித்ரா கோபமாகவே இதைக் கூறினாள்.

அன்று வாராந்தர நாளாகையினால் மாமல்லபுரத்திற்குப் போகிற சாலையிலோ மாமல்லபுரத்திலோ கூட்டம் அதிகமில்லை. விடுமுறை நாளாகவோ ஞாயிற்றுக்கிழமையாகவோ இருந்திருந்தால் கூட்டம் பொங்கி வழியும்.

கடற்கரைக் கோவிலுக்குள் போகிற சாலையில் அந்த டீக் கடையைக் கண்டுபிடிப்பது மிகவும் சுலபமாயிருந்தது. வாசலில் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டுப் பூமியும், சித்ராவும் கீழே இறங்கிய போது கடையில் ஒரே ஒரு சிறுவன் மட்டும்தான் இருந்தான். ஓனர் ஊருக்குள் போயிருப்பதாகவும் பத்து நிமிஷத்தில் திரும்பி வந்துவிடக்கூடும் என்றும் பையன் சொன்னான்.

அவனிடம் கேட்டு இரண்டு தேநீர் வாங்கிக் குடித்த பின் காசு கொடுத்துவிட்டுப் பத்து நிமிஷம் கடற்கரைக் கோவிலைச் சுற்றிவிட்டு வரலாமென்ற கருத்துடன் பூமியும் சித்ராவும் நடந்தார்கள். ஸ்கூட்டர் கடை வாசலிலேயே இருந்தது. பூமி நடந்து கொண்டே அவளிடம் கூறினான்.

“சிலந்தி வலை பின்னியிருப்பது போல் இந்த அயோக்கியன் மன்னாரு எங்கெங்கோ எது எதிலோ தொடர்பு வைத்திருக்கிறான். அரசியல், கள்ளச் சாராயம். அழகு விடுதி, டீக்கடை என்று எந்த மூலையில் தொட்டாலும், அது அவனுடைய சாம்ராஜ்யத்தில் போய் முடிகிறது.”

“உண்மையிலேயே பார்க்கப்போனா இன்னிக்கி நேரடியா இல்லாவிட்டாலும் மறைமுகமாக இப்படித் தீயசக்திகள் தான் நம்மை ஆட்சி செய்யிறாங்க.”

“இப்படித் தீய சக்திகளை ஒடுக்கணும்னு நம்மைப் போன்றவர்கள் நினைக்கிறோம்.பணம் சேர்த்தால் மட்டுமே போதும் என்று முத்தக்காளைப் போன்றவர்கள் நினைக்கிறார்கள்."