236
சாயங்கால மேகங்கள்
"அவங்களைப் போல இருக்கிறவங்களோட வாழ்க்கை எல்லையின் உச்சபட்ச இலட்சியமே பணம் மட்டும் தான் போலிருக்கிறது.”
“அதிகபட்சம் மட்டுமில்லை! குறைந்தபட்ச லட்சியம் கூடப் பணம்தான். வேறுவிதமாக நினைக்க அவங்களுக்குத் தெரியாது.”
சிறிதுநேரம் பேசிக் கொண்டிருந்து விட்டுப் பூமியும் சித்ராவும் மறுபடி அந்த டீக்கடைக்குப் போனார்கள். இன்னும் அந்த ஆள் வரவில்லை. மிகவும் அவசரமாகப் பார்க்க வேண்டும் என்றால் ஊருக்குள் ‘பெட்ரோல் பங்க்’ அருகே உள்ளே வெற்றிலை பாக்குக் கடை வாசலில் ஒருவேளை கிடைக்கலாம் என்று டீக்கடைப் பையன் சொன்னான்.
ஸ்கூட்டரைக் கிளப்பிக் கொண்டு ஊருக்குள் பெட்ரோல் பங்க் அருகே போய்ச் சேர்ந்தார்கள். ‘மன்னரு'வின் ஏற்பாடுகள், ஆட்கள் தயாரிப்புகள் எல்லாமே எங்கெங்கோ, எப்படி எப்படியோ சம்பந்தா சம்பந்தமின்றி மிகவும் மர்மமாகவே இருந்தன. அந்த மாமல்லபுரம் ஆள் சிக்குவதே சிரமமானதாயிருந்தது.
பெட்ரோல் பங்க் அருகே உள்ள வெற்றிலைப் பாக்குக் கடையில் கூட, அவன் அகப்படவில்லை. அவன் ஏழு ரதங்களுக்கு அருகே உள்ள இளநீர் விற்கும் கடை ஒன்றைக் குறிப்பிட்டு அங்கே போகச் சொன்னான். பூமியும் சோர்ந்து விடவில்லை. கண்டுபிடித்து ஆளைச் சந்திக்காமல் போவதில்லை என்று பிடிவாதமாயிருந்தான். அன்று ஏழு ரதங்களுக்கு அருகே வெறிச்சென்று கூட்டமின்றி இருந்தது. தேடிப் போன ஆளைப் பார்த்ததுமே பூமிக்கு எங்கோ பார்த்த முகமாக இருப்பதுபோல் பட்டது.
“இவன் ஏற்கனவே மைலாப்பூரில் ஸ்கூட்டரை வழி மறிச்சு நம்மைத் தாக்கின ஆளுங்களிலே ஒருத்தன்தான்"