அவசரமும் பதற்றமும் கொண்டு பாய்ந்த எதிரியின் அரிவாள் வீச்சுக்குத் தப்பிக்க குனிந்து கொடுத்துப் போக்குக் காட்டி அவனை ஏமாற்றிக் காலை இடறிவீட்டுக் கீழே வீழ்த்தினான் பூமி. வெறும் முரட்டுத் தனமும், தடித்தனமும், மட்டுமே உள்ளவனாயிருந்த அந்த எதிரி நொடியில் வீழ்ந்து விட்டான். அவன் கையிலிருந்து இளநீர் வெட்டும் அரிவாள் எங்கோ எகிறிப் போய் விழுந்தது.
மலைத்துப் போய் நின்றிருந்த சித்ரா நிம்மதியாக மூச்சு விட்டாள். முற்றிலும் எதிர்பாராத சமயத்தில் அந்த முரடன் அரிவாளை ஓங்கிக் கொண்டு பாய்ந்ததைப் பார்த்த அவளுக்குப் சப்த நாடியும் ஒடுங்கிப் போயிருந்தது. இவ்வளவு ஆபத்துக்களையும், இவ்வளவு விரோதங்களையும் பூமி வலுவில் தேடிக் கொள்கிறானே என்று அவன் மேல் சலிப்பாயிருந்தது. அதே சமயம் அதற்காகவே அவனைத் தவிர்க்க முடியாமல் விரும்பவும் வேண்டியிருந்தது.
எல்லாவற்றிலிருந்தும் விலகி, எல்லாவற்றிலிருந்தும் தப்பித் தன்னைப் பத்திரப்படுத்திக் கொள்ளும் சுய நலமான ஓர் ஆண்மையாளளைவிட எதிலிருந்தும் பயந்து விலகி ஓடாமல் எதிலிருந்தும் தன்னளவில் தப்பி நிற்க முயலாமல், எதிர்த்து நிற்கும் சுயநலமற்ற தீரனை அதிகம் விரும்ப முடிந்தது. பூமி பயமே என்னவென்று தெரியாதவனாக இருந்தான், பயப்படுவது தான் பெரிய பாவம் என்று எண்ணினான் அவன், தீயசக்தி களிலிருந்து தன்னையும் தனக்கு வேண்டியவர்களையும் காத்துக் கொள்ள வேண்டும் என்று முன் நிற்பதைவிடத் தனக்கு வேண்டாதவர்களையும், தெரியாதவர்களையும் கூடக் காக்க வேண்டுமென்று அவன் முன் நின்றான்.
அவனுடைய இந்தக் குணம் அவளை உருக்கி நெகிழ வைத்தது பொது வாழ்வில் எந்த வகையைச் சேர்ந்தவர்கள் மிகவும் அபூர்வமோ அந்த வகையைச் சேர்ந்தவன் அவன். அவனைத் தவிர்க்க முடியாது. விலக்க முடியாது: சித்ராவைப் பொறுத்தவரை அவள் ஆத்மார்த்தமாக இதை உணர்ந்தாள்.