பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆட்சியையும், அரசாங்கத்தையுமே எதிர்த்துப் போராடிக் கொண்டிருப்பதாகப் பூமிக்குத் தோன்றியது.

இந்தப் போராட்டத்தில் எதிரியைக் கண்டுபிடிப்பதே சிரமமாயிருக்கும் என்று குழப்பம் உண்டாயிற்று. வில்லன்களின் அந்தரங்கமான இரகசியத் தயவினால் கதாநாயகனாக வாழும் ஒரு கதையில் முடிவு எப்படிக் கிடைக்கும்? வில்லன் ஜெயித்தாலும், கதாநாயகன் ஜெயித்தாலும் வெற்றி வில்லனுக்குத்தானே? வில்லன்களுக்குப் பினாமிகளாகத்தான் பல கதாநாயகர்களே இருக்கிறார்களோ என்று புதிய கவலை பிறந்தது அவனுக்கு.

நல்லவன் கெட்டவன் என்று பிரித்துப் பார்த்த பழைய பார்வையை விட உழைக்கிறவன், சுரண்டுகிறவன் என்று இப்படிப் பார்க்கிற புதிய பார்வையினால் உலகத்துக்கு நலம் கிடைக்கலாமே என்று எண்ணினான் அவன். உலகில் இப்படி இரண்டு வர்க்கங்கள் மோதினால் தான் நியாயம் பிறக்குமோ என்று சிந்திக்கத் தோன்றியது.

டில்லி, பயத்தினாலும், வாங்கிய உதையாலுமே பூமிக்கு ‘தோஸ்த்’ ஆகி விட்டான், ‘கரும்பு போல் கொல்லப் பயன்படும் கீழ்--’ என்ற திருவள்ளுவரின் கருத்து பூமிக்கு நினைவு வந்தது. சிலருக்கு வெறும் வார்த்தைகளாலேயே புரிகிற பொருள் வேறு சிலருக்கு அடி உதைகளால்தான் புரிகிற நிர்ப்பந்தம் தவிர்க்க முடியாதென்று பட்டது. சிலருக்கு வார்த்தைகள் புரிந்தன. வேறு சிலருக்கு அடி உதைகள்தான் புரிந்தன.

டில்லியிடம் விடை பெற்றுக் கொண்டு அவன் தெரிவித்த இரகசியங்களை யாரிடமும் தெரிவிப்பதில்லை என்ற உறுதி மொழியையும் கூறிவிட்டுப் பூமி சித்ராவுடன் சென்னை திரும்பினான்.

அவர்கள் மெஸ்ஸை அடைந்த போது இரவு ஏழு மணி ஆகியிருந்தது. வழக்கத்தை மீறி அவனும் சித்ராவும் உள்ளே நுழைகிறபோதே முத்தக்காள் எதிர் கொண்டு வந்து சீறினாள்.