பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

242

சாயங்கால மேகங்கள்

"இப்பிடியே சினிமாவில் வர்ர காதலன் காதலி மாதிரி ஊர் சுத்திக்கிட்டிருந்தா மெஸ் நிர்வாகத்தை யார் கவனிப் பாங்க?”

சுற்றிலும் வேலையாட்கள், சர்வர்கள், கஸ்டமர்கள் எல்லாரையும் வைத்துக் கொண்டு ஒரு சிறிதும் நாகரிகமே இல்லாமல் அவள் இப்படிப் பேசியது பூமிக்குப் பிடிக்கவில்லை. பத்திரமாக ஊரிலிருந்து வரவழைத்து உட்கார்த்திய சொந்தக்காரப் பையனை நம்பி அவள் தங்களிடம் தாறுமாறாகப் பேசுகிறாள் என்பதும் புரிந்தது. பதிலுக்கு அவனும் கடுமையாக அவளை எதிர்த்துக் கேட்டான்.

“நீங்கள் பேசுவதைப் பார்த்தால் நானும் இவளும் உங்களிடம் மாதச் சம்பளத்துக்கு வேலை பார்ப்பவர்கள் என்று நினைத்துக் கொண்டு பேசுவதாகப் படுகிறது. நாக்கைக் கட்டுப் படுத்திப் பேசப்படித்துக் கொள்ள வேண்டும் நீங்கள்.”

“சம்பளம் வேணும்னா அதையும் எடுத்துக்கலாமே? யார் வேண்டாம்னாங்க?”

“உங்களிடம் கூலிக்கு வேலை பார்க்க நான் வரவில்லை. உங்கள் கஷ்ட காலங்களில் உதவ முன் வந்தேன்...”

“இங்கே யாரும் அப்பிடிக் கஷ்டப்பட்டுத் தவிக்கலியே?”

“அப்படியா? இனி மறுபடி நீங்களே வந்து கூப்பிட்டாலொழிய இந்த வாயிற்படியை மிதிக்க நான் தயாராயில்லை” என்று அப்படியே சித்ராவுடன் படியிறங்கினான் பூமி.

முத்தக்காள் எடுத்தெறிந்து பேசியது அவனைப் பொறுமை இழக்கும்படி செய்திருந்தது.