சாதாரணமானவர்களால் சந்தோஷ்மாக இருக்கும் போது மட்டுந்தான் நகைச்சுவையாயிருக்க முடியும். சிரமப்படும் போது கூட அசாதாரணமான நகைச்சுவை உணர்வோடு இருக்க முடிந்தவர்கள் யாரோ அவர்கள் நிச்சயம் சாதாரணமானவர்கள் இல்லை.
முத்தக்காளிடம் அவளுடைய போக்கைக் கடிந்து பேசி விட்டுத் தானும் சித்ராவும் படியிறங்கியபோது ‘நீ போகக் கூடாது’ என்றோ ‘நீ போட்டிருக்கிற பணத்தைக் கணக்குப் பார்த்து எடுத்துக் கொண்டு போ’ என்றே உபசாரத்துக்காகவாவது முத்தக்காள் தடுத்துச் சொல்லுவாள் என்று பூமி எதிர் பார்த்தது வீணாயிற்று. அவன் அப்படி கோபித்துக் கொண்டு வெளியேற வேண்டுமென்றே அந்த ஏற்பாடுகளையெல்லாம் திட்டமிட்டுச் செய்தவள் போல் பேசாமல் இருந்து விட்டாள் அவள். ஸ்கூட்டருக்காகத் தேடி வந்திருந்த பரமசிவத்தின் தம்பி அதை எடுத்துக் கொண்டு போனான்.
மெஸ்ஸை விட்டுத் தெருவில் இறங்கிய போது மனம் ஏதோ ஓர் ஆதரவை நாடியதாலோ, ஏதாவது ஒரு பற்றுக் கோடு வேண்டும் என்று எண்ணியதாலோ எதனாலென்று தெரிய வில்லை; பூமியினுடைய வலக்கரம் சித்ராவின் வலக்கரைத்தைப் பற்றியிருந்தது.
பரமசிவம் அண்ணாச்சியோடு நடந்து செல்லும் போது, செய்வதைப் போலவோ, தன்னிடம் கராத்தே கற்கும் இளைஞர்கள் சிலரிடம் உற்சாகமாகப் பழகும் போது செய்வதைப் போலவோ சித்ராவிடமும் நடந்து கொண்டிருந்தான் அவன். அநிச்சையாகவும் திட்டமின்றியும் நினைப்பின்றியும்