சாயங்கால மேகங்கள்
23
களின் தொலைவை நினைத்தபோது இவள் நிலைமை எவ்வளவோ பரவாயில்லை என்றும் தோன்றியது. பாலாஜி நகரில் வசிப்பவள் முதல் முறையாகத் தன் ஆட்டோவில் ஏறி நேர்ந்தபோது எப்படி மயிலாப்பூரில் ஏறினாள் என்று சிந்தித்தான் அவன். ஏதாவது காரியமாக அவள் அங்கே வந்திருக்க வேண்டும் என்று அநுமானிக்க முடிந்தது.
வெளியே ஆட்டோவில் சவாரிக்காகவும், சவாரியோடும் சுற்றுகிறபோது புத்தகம் படிக்க விரும்புகிற மாதிரி இப்போது வீட்டில் அடைந்து கிடக்கிறபோது அதிகம் விரும்ப முடியவில்லை, திகட்டியது. எல்லாப் பத்திரிகைகளும் ஒரே மாதிரி இருந்தன. அப்பட்டமான வர்த்தக யந்திரத்தின் போட்டி வெறி என்ற வக்கிரமான கலாசாரத்தில் இதழ்கள் சீரழிந்திருப்பதைத்தான் கன்னையன் வாங்கிக் குவித்திருந்த பத்திரிகைகள் நிரூபித்தன.
பத்திரிகைகளை விலக்கி விட்டுப் பார்த்தால் கையிலிருந்த புத்தகங்களை எல்லாம் ஏற்கெனவே படித்து முடித்தாயிற்று. அவனுக்கு வழக்கமாகப் புத்தகங்களை வாடகைக்குத் தரும் லெண்டிங் லைப்ரரி லாயிட்ஸ் சாலையும் இராயப்பேட்டை நெடுஞ்சாலையும் சந்திக்கிற முனையில் இருந்தது.
‘திரு. வி, க, நூல் நிலையம்’ என்ற பெயரில் அந்த லெண்டிங் லைப்ரரியை நடத்தி வந்த பரமசிவமும் பூமியைப் போலவே ஒரு படித்த வேலையில்லாப் பட்டதாரிதான்.
அவன் சுயமுயற்சியாக அந்த லெண்டிங் லைப்ரரியைத் தொடங்கியிருந்தான். மாதம் ஐந்து ரூபாய் சந்தாவில் முந்நாறு முந்நூற்றைம்பது பேர் சேர்ந்திருந்தார்கள். கிடைக்கிற மொத்த வருமானத்தில் இட வாடகை, தமிழிலும் ஆங்கிலத்திலுமாகப் புதிய புத்தகங்கள் வாங்கி முதலீடு ஆகியவை போகப் பரமசிவத்துக்கு மாத ஊதியமாகக் கொஞ்சம் மிஞ்சியது. ஊதியம் கொஞ்சமென்று பாராமல் அயராமல் உழைத்தான் பரமசிவம்.