சாயங்கால மேகங்கள்
249
மொத்தமாக எடுத்து விநியோகிக்கும் ஒரு புள்ளியும் அவருக்கு வேண்டியவர்களுமாகப் பூமியும் அவனுடன் இருந்தவர்களும் அவர்களால் புரிந்துக் கொள்ளப்பட்டிருந்தனர்.
கட்டு மரத்து ஆட்களோ மற்றவர்களோ எது கேட்டாலும் தன்னுடன் இருந்தவர்கள் எதுவும் பதில் பேசக் கூடா தென்றும் தானே எல்லாருக்கும் பதில் சொல்லியும், சொல்லாமலும் சமாளிக்க முடியுமென்றும் பூமி கூறியிருந்தான். இரவில் கட்டு மரத்தில் பயணம் செய்வது சிலிர்ப்பூட்டும் அநுபவமாயிருந்தது. அந்தப் பகுதி கடலும் மனிதர்களும் கடத்தல்காரர்களுடனும், கடத்தல் படகுகளுடனும், கடத்தல் பண்டங்களுடனும், கடத்தல் பணத்துடனும் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பது வெளிப்படையாகவே தெரிந்தது. மன்னாருவுக்கும் அதில் பங்கு இருக்குமோ என்று பூமி அப்போது எண்ணினான்.
கடற்சிலந்திபோல மன்னாருவின் கைகள் எத்தனை திசைகளில் எத்தனை வகையாக நீண்டிருக்கும் என்பதை அநுமானிக்க முடியாமல் இருந்தது. உப்பங்கழியான காயல் பகுதியாக இருந்ததனால் அவர்கள் பயணம் செய்த கடற் பகுதியில் அதிகக் கொந்தளிப்போ அலைகளோ இல்லை. கட்டுமரங்களைவிட்டு இறங்கியவுடன் டாக்ஸிக்கோ ஆட்டோவுக்கோ கணக்குத் தீர்க்கிற மாதிரித் தீர்த்து விடமுடியாது. திரும்பும் பயணமும் முடிந்து கரைபோய்ச் சேர்ந்த பின் கட்டு மரக்காரர்கள் ஒரு பெருந்தொகை எதிர்பார்க்கிறார்கள் என்பது அவர்களிடம் கொஞ்சம் பேச்சுக் கொடுத்துப் பார்த்ததிலிருந்து பூமிக்குப் புரிந்தது.
எண்ணிக்கையில், அவர்கள் இருவர், தாங்கள் மூவர் என்ற நம்பிக்கை தெம்பளித்தது. அவர்களால் கெடுதலோ வம்போ வருமானால் சமாளிக்க முடியுமென்றே பூமி நம்பினான். உடன் அழைத்து வந்திருந்த இருவரும் நன்கு உதவக் கூடியவர்கள் என்பது பூமியின் கணிப்பாக இருந்தது.