உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

252

சாயங்கால மேகங்கள்

தாமதித்தபின் ஏமாற்றத்தோடு மேலே நடந்தார்கள். சூழ்நிலை மர்மமாயிருந்தது.

சிறிது தொலைவில் கடல் ஓலமிடும் ஓசை வேறு அந்த மர்மமான சூழ்நிலைக்குச் சுருதி கூட்டியது. நெடுநேரம் அலைந்து திரிந்த பின் தணிவான பெரிய திண்ணையோடு கூடிய ஓர் ஓட்டடுக்கு வீடு தென்பட்டது. திறந்திருந்த ஒரே சன்னல் வழியாக மங்கிய அரிக்கேன் லாந்தர் வெளிச்சம் தெரிந்தது. உள்ளே பேச்சுக் குரலும் கேட்டது.

பூமியும் நண்பர்களும் அந்த வீட்டு வாசலில் சிறிது தயங்கி நின்றார்கள். அடுத்த கணமே உள்ளேயிருந்து ‘யாரது?’ என்று. கனமான குரலும் அதையொட்டிக் கதவு திறக்கப்படும் தாழ்ப்பாள் ஓசையும் கேட்டன. கையில் அரிக்கேன் லாந்தரைப் பிடித்தபடி, தாடி மீசை நெற்றியில் காலணா அகலக் குங்குமப் பொட்டுடன் ஒரு முதியவர். வெளிப்பட்டார்.

“நீங்கள்ளாம் யாருங்க”

பூமிக்கு அவரிடம் உண்மை பேச வேண்டுமென்று தோன்றியது. தங்களைப் பற்றிய விவரங்களைக் கூறி, வந்த காரியத்தையும் சொன்னான்.

“அதானே பார்த்தேன்? கடத்தல்காரர்களைத் தவிர வேற யாரும் இங்கே இந்த நேரத்தில் தட்டுபடறது வழக்கமில்லையே?” என்று முதியவர் வியந்தார்.

பூமி அவரிடம் அவருக்கு நம்பிக்கை ஏற்படுகிற விதத்தில் தொடர்ந்து பேச்சுக் கொடுத்துப் பார்த்தான். கொஞ்சம் நம்பிக்கை பிறந்தது.

“எவ்வளவு நேரந்தான் நின்னுகிட்டுப் பேசறது? வாங்க... திண்ணையில் உக்காருவம்” என்று அவர்களை அழைத்தார் முதியவர்.

திண்ணையில் போய் உட்கார்ந்ததும் அவரே தொடர்ந்தார்.