பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாயங்கால மேகங்கள்

253

"நீங்க கடத்தல் வேலையா வராம வேற வேலையா வந்த ஆளுங்கன்னு தெரிஞ்சிருந்தாக் கட்டு மரத்து ஆளுங்களே உங்களை இந்நேரத்துக்கு இங்கே இட்டாரச் சம்மதிச்சிருக்க மாட்டாங்க. நீங்களும் கடத்தல் வேலையா வந்திருக்கீங்கன்னுதான் இங்கே இட்டாந்தாங்க... இந்தத் தீவு இதுக்கு வர்ரதுக்கும் திரும்பறத்துக்குமான போக்குவரத்து வசதிங்க எல்லாமே கடத்தல்காரங்க கண்ட்ரோல்லே போயிடிச்சு. தீவுல காலடி வச்சதும் மீன் விக்கிறவமாதிரி யாராவது ஒருத்தி வந்து மீன் வாங்க வந்தீங்களா'ன்னு தெலுங்கில் கேட்பா. பதில் சரியாக் கிடைச்சா உள்ளே இட்டுக்கினு போய்ச் சரக்கைக் காமிப்பாங்க... இல்லாட்டி... ஆள் தப்ப முடியாது! அநேகமாக எல்லாருமே ஊரைக் காலி பண்ணிட்டுப் போயிட்டாங்க... நான் ஒருத்தன்தான் துணிந்து காலந் தள்ளிக்கிட்டிருக்கேன். என் சம்சாரம் பசங்களுக்கெல்லாம் கூடப் புடிக்கலே. இங்கேயிருந்து போயிடணும்னுதான் அவங்கள்ளாம் நெனைக்கிறாங்க. இங்கேயிருந்தா மன்னாரு வகையறா என்னிக்காவது கொலை கூடப் பண்ணிருவாங்கன்னு பயப்படறாங்க.”

“போலீஸ் கம்ப்ளெயிண்டு கொடுத்து இதை ஒழிக்க முடியாதா?”

“முடியாதுங்க! சில வேளைகளிலே ‘பூனைக்கும் காவல் பாலுக்கும் தோழன்'கிற பழமொழி மாதிரி ஆயிடுது! நேத்துப்பாருங்க... இந்த மன்னாரு: கோஷ்டிக்குத் துரோகம் பண்ணிட்டான்னு நல்ல வயசுப்புள்ளையாண்டான் ஒருத்தனை இங்கே கொண்டாந்து கொலை பண்ணி ஜூரத்தினாலே செத்தான்னு புளுகிப் புதைச்சிட்டாங்க?”

இதைக் கேட்டுப் பூமிக்குத் திக்கென்றது. உடனே உஷாராகி அவன் அவரைக் கேட்டான்.

“நிஜமாவா? அது நேத்தா நடந்திச்சு?”

“ஆமாங்க! இந்தத் தீவாந்தரத்திலே கேள்வி கேப்பாரே இல்லே. யார் போய் இதைப் புகார் பண்ணப் போறாங்க?"