உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

256

சாயங்கால மேகங்கள்

இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் கடல் அலைகளின் தூரத்து ஒலியும் காற்று சுழற்றிச் சுழற்றி அடிக்கும் ஓசையுமாக இருந்த ஒரு சூழலில் அவர்கள் வீட்டிலிருந்து புறப்பட்டார்கள். அதிக ஸெல்கள் போட முடிந்த ஒரு நீளமான டார்ச்சுடன் காளத்திநாதன் வழிக்காட்டிச் செல்லப் பூமியும் நண்பர்களும் அவரைப் பின் தொடர்ந்தார்கள். கடற்கரை காயற்பகுதியாயிருந்ததனால் நிலம் சொத சொத என்று ஈரமாயிருந்தது. விரைந்து நடப்பதற்கு முடியவில்லை.

சில சமயங்களில் பகலில் தரை தெரிகிறாற் போலிருக்கும். அந்தப் பகுதி நிலப்பரப்பில் இரவில் முழங்கால் ஆழத்திற்கு உப்பு நீர் நிரம்பி மறுபடி விடிந்ததும் வடியும்” என்றார் காளத்திநாதன்.

இவர்கள் அதிர்ஷ்ட்மோ என்னவோ அன்று அவ்வாறு தண்ணீர் நிரம்பவில்லை. ஆனாலும் நடப்பது சிரமமாகத்தான் இருந்தது. அடுத்த அடி எடுத்து வைப்பதற்காகக் காலைத் தூக்கினால் செருப்புத் தரையோடு பசை போட்டு ஒட்டின மாதிரிச் சிக்கிக் கொண்டு வர மறுத்தது.

தாழம்புதரும், புன்னை மரங்களுமாக அடர்ந்திருந்த ஒரு பகுதியைக் கடந்ததும் சில மேடுகள் சிலுவை, கோபுர அடையாளங்களோடு கட்டப்பட்டுக் கடற்காற்றில் உப்புப் பரிந்த சமாதிக் கட்டிடங்கள் தென்பட்டன.

“இங்கே எல்லா ஜாதி ஜனங்களுக்கு ஒரே மயானம் தான்! வேறு இடம் கெடையாது.” “இங்கேயாவது அப்படி இருக்கிறதே?” என்று கேட்டு விட்டுச் சிரித்தான் பூமி.

“இங்கே எரிக்கிறதுக்கு வசதி குறைவு. ராவுல தண்ணி ஏறிச் சிதையை அவிச்சிடும்கிற காரணம் வேற எரிக்கிறத்துக்கு இடைஞ்சலா இருக்கு! விறகு கட்டைக் கடைன்னு எதுவும் இங்கே கிடையாது."