சாயங்கால மேகங்கள்
257
இனிமேல் இந்தத் தீவுக்கு மயானம் கூடத் தேவை இல்லை பெரியவரே! இங்கேதான் யாருமே குடியிருக்கலியே? கடத்தல்காரங்க மட்டுந்தானே வந்து போறாங்க. அதுக்காக ஒரு தனி மயானம் எதுக்கு?”
“சொல்லப் போனாக் கடத்தல்காரங்க வந்தப்பறம்தான் இந்த மயானத்துக்கே உபயோகம் நெறைய ஆகியிருக்கு....இயற்கையாச் சாகிறவங்களை விட அவங்களாலே சாகடிக்கப் படறவங்கதான் இப்ப அதிகம்! கேள்வி முறையில்லாம அடிச்சுக் கொன்று புதைச்சிட இந்தத் தீவு வசதியா இருக்கு.”
கூறிக்கொண்டே ஒரு குறிப்பிட்ட பகுதியில் டார்ச் ஒளியைப் பாய்ச்சினார். காளத்திநாதன். புதிதாக மூடப்பட்ட ஈரமண் மேட்டில் புன்னை மரக் கொம்பினாலேயே சிலுவை மாதிரி ஒடித்துக்கட்டி வைத்திருந்தது. சிலுவை நுனியில் உட்கார்ந்திருந்த பெரிய ஆந்தை ஒன்று வெளிச்சத்தைப் பார்த்ததும் சிறகடித்து எழ முயன்றது. அதன் குரூரமான கண்கள் டார்ச் ஒளியில் பளிரென மின்னின.
“அவசரத்திலே சரியாக் கூட மூடிட்டுப் போகலே” என்று கீழே குனிந்து இரத்தக் கறை படிந்த சட்டை ஒன்றை மண் குவியலிலிருந்து எடுத்தான் பூமியோடு இருந்த நண்பன் ஒருவன்.
சட்டையை வாங்கி அதன் தோள்பட்டைப் பகுதியைப் பார்த்த பூமிக்குத் திக்கென்றது. அதில் முத்தக்காள் மெஸ் சர்வர்களும், வேலையாட்களும் பயன்படுத்துகிற் ‘யூனிஃபாரத்'தின் அடையாள எழுத்துக்களாகிய ‘எம்.எம்’ என்ற ஆங்கில முதல் எழுத்துக்கள் இருந்தன.
தனது வியப்பையோ திகைப்பையோ வெளிக்காட்டிக் கொள்ளாமல் அந்தச் சட்டையை மடித்து வைத்துக் கொண்டான் பூமி. ‘பையனை இங்கே கொண்டு வந்து காதும் காதும் வைத்தாற்போல் இரகசியமாகக் கொன்று புதைத்து விட்டார்கள்’ என்று அவனுடைய உள் மனத்துக்குத் தோன்றியது. அவன் காளத்திநாதனிடம் கூறினான்.