பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

258

சாயங்கால மேகங்கள்

"சந்தேகமாகத்தான் இருக்கிறது. ஆனால் நாமே இப்போது இதைத் தோண்டிப் பார்ப்பதை விடத் தக்க போலீஸ் ஏற்பாட்டோடு வந்து முயற்சி செய்வதுதான் நல்லது” என்று அவன் கூறியதை அவரும் ஒப்புக் கொண்டார்.

“நாம் தோண்டறது நல்லதில்லே. பாதி தோண்டிக்கிட்டிருக்கறப்பவே மன்னாரு ஆளுங்க கூட்டமா வந்து நம்மை உதைச்சாலும் உதைப்பாங்க. போலீஸ் வந்தாக் கூட மப்டிலே வந்தாத்தான் முடியும்! இல்லாட்டி முதல்லேயே உஷாராயிடுவாங்க” என்றார் அவர்.

தாங்கள் வந்தது போனது எல்லாவற்றையுமே இரகசியமாக வைத்துக்கொள்ளுமாறு காளத்திநாதனிடம் கூறிவிட்டுப் புறப்பட்டார்கள் அவர்கள் காளத்திநாதனிடம் அவர்கள் விடைபெற்ற பின் மீனவப்பெண் இருந்த குடிசைவாசலில் குண்டர்கள் ஐந்து பேர் வந்து வளைத்துக் கொண்டார்கள். அவர்களது விசாரணையே தடித்தனமாய் இருந்தது.

“யாருடா நீங்கள்ளாம்? என்ன வேலையா இந்நேரத்துக்கு இங்கே வந்தீங்க...?”

பூமி இதைக் கேட்டதும் முதலில் குமுறினான், இவர்களை அடித்து உதைத்து விட்டுத் தப்ப முடியும் என்றாலும் அதனால் மறுகரையிலும் ஆபத்துக்கள் தொடருமே என்று பின்பு தந்திரமாக யோசித்தான் பூமி. இவர்களோடு சண்டையிடுவதைக் கட்டுமரக்காரர்கள் பார்த்துவிட்டால் தங்களை மறுகரைக்குத் திரும்பக் கொண்டு போய்ச் சேர்க்க அவர்கள் மறுப்பார்களோ என்ற சந்தேகம் வேறு வந்துவிட்டது. எனவே தாங்களும் அவர்களுடைய நண்பர்களே என நிரூபிக்க ஏற்ற வகையில் நடித்துத் தப்புவதே சிறந்ததென்று தோன்றியது.

“என்னப்பா நம்ம ஆட்களே. நம்ம ஆட்களை முறைக்கிறீங்க?” என்று தொடங்கி மன்னாரு ஒரு வேலையாகத் தங்களை அங்கே அனுப்பியதாகப் பொய் கூறினான் பூமி. குண்டர்கள் விடவில்லை.