260
சாயங்கால மேகங்கள்
மைலாப்பூர் திரும்பியபோது அதிகாலை மூன்று மணி ஆகியிருந்தது. அந்த இரவு சிவராத்திரி ஆகிய களைப்பில் நண்பர்கள் அயர்ந்துபோயிருந்தார்கள். அந்த நண்பர்களைத் தன் வீட்டிலேயே உறங்கச் சொல்லிய பின் பூமி ஒருவித வைராக்கியத்தோடு வீட்டிலிருந்து வெளியேறி ஹை ரோடுக்கு வந்தான்.
மனித உருவில் தான் இந்தக் காலத்து ராட்சஸர்கள் திரிகிறார்கள். அவர்களை அவர்களது செயலிலிருந்துதான் மனிதர்கள் இல்லை என்று கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது.
இரண்டொரு டீக்கடைகளைத் தவிர ஹைரோடு அமைதியிலாழ்ந்திருந்தது. கிழக்கே இன்னும் சிறிது நேரத்தில் விடிவெள்ளி முளைத்துவிடும். காற்று வைகறையின் குளிர்ச்சியைச் சுமந்து வீசத் தொடங்கியது. தெருக்கள் சந்தடியற்று உறங்கிக் கொண்டிருந்தன. பூமி நடந்து கொண்டிருந்தான்.
அந்தப் பையனை ‘மன்னாரு’ வகையறாக்கள் கொன்று புதைத்து விட்டார்கள் என்ற உண்மை கசப்பாயிருந்தது. ஒருபுறம் தாங்க முடியாத சோகமும், மறுபுறம் தவிர்க்க முடியாத வைராக்கியமுமாகப் போலீஸ் ஸ்டேஷனை நோக்கி நடந்தான் அவன்.
பையனின் அநாதைத் தாய்க்கு இந்த உண்மை தெரிந்தால் அவள் எப்படிக் கதறி அழுது தவிப்பாள் என்று நினைத்துப் பார்த்தபோது இன்று தன் தாய் உயிரோடு இருந்து தான் இப்படி ஓர் அபாயத்துக்கு ஆளாகியிருந்தால் என்ன நேரும் என்று ஒப்பிட்டுப் பார்த்தது அவன் மனம்.