பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

262

சாயங்கால மேகங்கள்

மேலுள்ள பிரியத்தின் காரணமாக அந்த அகாலத்தையும் பொருட்படுத்தாமல் போலீஸ் ஸ்டேஷனுக்குத் தேடி வந்திருப்பதை அவன் உணர்ந்தான்.

“என்னை யாரும் எதுவும் பண்ணி விடமுடியாது சித்ரா! உன் பயமும் கவலையும் அநாவசியமானவை.”

“போன காரியம் என்ன ஆச்சு”

“எல்லாம் சொல்கிறேன். முதலில் இந்த இன்ஸ்பெக்டரிடம் சில விவரங்கள் சொல்லிவிட்டு வருகிறேன். அதுவரை கொஞ்சம் பொறுத்துக் கொள்.”

பூமி இன்ஸ்பெக்டரிடம் எல்லா விவரங்களையும் சொன்னான். இன்ஸ்பெக்டர் காரியத்தின் அவசரத்தை உணர்ந்து கிரைம் பிராஞ்சுக்கும், கண்ட்ரோல் ரூமுக்கும் தொடர்பு கொண்டு மேலதிகாரிகளிடம் பேசினார். பூமியிடம் விவரங்களை எழுதி வாங்கிக் கொண்டார். காலை 6 மணிக்குப் பூமியை மறுபடி. அங்கே வருமாறு கேட்டுக் கொண்டார்.

அவர்கள் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்த சித்ரா காணாமல் போன பையன் கொலை செய்யப்பட்டு விட்டான் என்பதை அந்த உரையாடலிலிருந்து ஒருவாறு புரிந்து கொண்டு விட்டாள். அதனால் இருவருமாக ஸ்டேஷனிலிருந்து வெளியே வரும்போது அவள் பூமியைக் கேட்டாள்.

“இவ்வளவு அரும்பாடுபட்டு அலைந்தும் இப்படியா ஆச்சு? ரொம்பப் பரிதாபம். அந்த ஆயாகிட்டே இதை எப்பிடிப் போய்ச் சொல்றது?”

அந்தப் பையனே அவர்கள் தன்னைக் கொன்றுவிடப் போவதாகப் பயந்து நடுங்கினான். அவன் பயந்தபடியே நடந்து விட்டது. நான் எவ்வளவோ முயன்றும் அவனைக் காப்பாற்ற முடியவில்லை சித்ரா.

“அந்த ஆட்கள் ராட்சஸர்களா, மனிதர்களா?"